Monday, March 7, 2011

ATM – ஏ டிஎம் தெரிந்ததும் தெரியாததும்!

ATM (Automatic Teller Machine)
ஏ.டி.எம் எப்படிச் செயல்படுகிறது என்பதைப் பற்றிய தகவல்கள் எல்லாம் மிகவும் சுவாரஸ்யமானது.

கட்டுக்கட்டாக பணத்தை பாக்கெட்டில் வைத்துக் கொண்டு இப்போதெல்லாம் பஸ்சில் பதட்டப்பட்டுக்கொண்டே யாரும் பயணிப்பதில்லை. காரணம் ஏடி. எம் அட்டைகள்.
வங்கியில் கணக்கை ஆரம்பித்த அனைவருக்குமே ஒரு அட்டை கிடைக்க தற்போது எல்லா வங்கிகளும் வசதி செய்துள்ளன. எப்போது தேவையோ அப்போது எடுத்துக் கொள்ளலாம் எனும் நிலையும், எல்லா தெருக்களுக்குள்ளும் நுழைந்துவிட்ட தானியங்கி இயந்திரங்களும் பணத்தை தூக்கிச் சுமக்கும் பணியை குறைத்திருக்கின்றன.
நாம் பணம் தேவைப்படும் போது ஏ.டி. எம் முன்னால் சென்று நிற்கிறோம், நமது அட்டையை உள்ளே நுழைக்கிறோம். சங்கேத எண்ணை அமுக்குகிறோம். நம்முடைய கட்டளைக்கு ஏற்ப பணம் கிடைக்கிறது. திருப்திப்பட்டு விடுகிறோம்.
Automatic Teller Machine என்பதன் சுருக்கம் தான் ATM. நம்முடைய அட்டையில் 16 எண்கள் கொண்ட ஒரு எண் இருக்கும். இது நம்மைப் பொறுத்தவரையில் ஒரு சாதாரண எண். ஆனால் இதன் ஒவ்வொரு எண்ணிற்கும் தனித்தனி அர்த்தங்கள் உண்டு.
முதல் ஆறு எண்கள் அட்டை எந்த வங்கியிடமிருந்து பெறப்பட்டிருக்கிறது என்பதைக் குறிக்கும். அதற்கடுத்த ஒன்பது எண்களும் சேவை வழங்கு நிறுவனங்களின் விருப்பத்தைப் பொறுத்த எல்லைக்குள் இருக்கும். கடைசி எண் ஒரு ரகசிய எண். அதுதான் உங்கள் அட்டை பயன்படுத்தக் கூடியதா இல்லையா என்பதைச் சொல்லும்.
மாஸ்டர்கார்ட் எண்கள் ஐந்து எனும் எண்ணில் ஆரம்பிக்கும், விசா எண்கள் நான்கு எனும் எண்ணில் ஆரம்பிக்கும் என்பது ஒரு சிறு சுவாரஸ்யத் தகவல்.
அட்டைகளை இரண்டு பெரும் பிரிவாகப் பிரிக்கலாம். ஒன்று கிரடிட் கார்ட் எனப்படும் கடனட்டைகள். இன்னொன்று டெபிட் கார்ட் அல்லது செக் கார்ட். கடனட்டையில் நாம் செலவழிக்கும் பணத்தை மாதம் ஒருமுறை செலுத்தினால் போதும். செக் கார்ட் மூலம் செலவழிக்கும் பணம் நம்முடைய வங்கிக் கணக்கிலிருந்து உடனே கழிக்கப்பட்டு விடும்.
ஏடிஎம் முன்னால் சென்று அட்டையை உள்ளே செலுத்தி நம்முடைய சங்கேத எண்ணைக் குறிப்பிட்டபின் நமக்கு எவ்வளவு பணம் தேவை என்பதைக் குறிப்பிட்டு பொத்தானை அமுக்குகிறோம். நம்முடைய அட்டையின் பின்னால் இருக்கும் மேக்னட்டிக் ஸ்ட்ரைப் நம்முடைய அட்டையின் எண்ணை மென் குறியீடாக்கி உள்ளே அனுப்பும். அதற்குப் பயன்படும் இடம் தான் கார்ட் ரீடர் எனப்படும் நாம் அட்டையை உள்ளே நுழைக்கும் இடம். அப்போது கட்டளை ஏடிஎம் முனையிலிருந்து சுவிட்ச் என அழைக்கப்படும் கணினி மென்பொருளுக்குள் நுழைகிறது. இங்கே இரண்டு விதமான சோதனை வளையங்கள் இருக்கின்றன. முதலில் நாம் பயன்படுத்தும் அட்டை சரியானது தானா ? அதற்கு நாம் கொடுத்த சங்கேத எண் சரியானது தானா என்பதைச் சரிபார்க்கும் சோதனை.
இந்தச் சோதனை தோல்வியடைந்தால் நாம் ஏதோ தவறு செய்திருக்கிறோம் என்று பொருள். ஒருவேளை சங்கேத எண்ணைத் தவறாகச் சொல்லியிருக்கலாம்.
இரண்டாவது சோதனை நம்முடைய வங்கிக்கணக்கில் நாம் கேட்கும் பணம் இருக்கிறதா ? நான் பணம் எடுப்பதில் இன்றைய தினத்தின் உச்ச வரம்பை எட்டியிருக்கிறோமா ? என்பது குறித்த சோதனைகள். முதல் சோதனை முடிந்தபின், இரண்டாவது சோதனைக்குள் நுழைந்து இரண்டும் சரியாய் இருந்தால் பணம் கொடுக்கலாம் எனும் பதில் தானியங்கி முனைக்கு வரும். இந்த இரண்டு சோதனைகளையும் கடக்க பல இலட்சம் தகவல்கள் அடங்கியிருக்கும் மென் கோப்புகளில் தேடுதல் நடக்கும்.
இந்த தேடுதல் முடிந்து தானியங்கி முனைக்கு வரும் தாமதம் சில வினாடிகளே. இந்த வினாடிகள் அதிகரிக்கும் போது தான் நாம் சலித்துக் கொள்கிறோம்.
பணத்தை எண்ணித் தரும் பணம் பட்டுவாடா இயந்திரமும் நுட்பமான சென்சார்களால் ஆனது. இது தவறு இழைப்பதில்லை. இரண்டு நோட்டுகள் ஒட்டி வரும் எனும் ஆசை நப்பாசையாய் போய்விடும் என்பது திண்ணம்.
இன்னொரு சுவாரஸ்யமான விஷயமும் அடங்கியிருக்கிறது. நாம் நம்மிடம் ஒரு வங்கியின் அட்டை இருந்தாலும் வேறு வங்கியின் தானியங்கி நிலையமும் நமக்குக் பணம் கொடுக்கும். எப்படி ?
இதை செட்டில்மண்ட் என்பார்கள். அதாவது வங்கிகள் எந்தெந்த வங்கி அட்டைகளுக்குப் பணம் கொடுக்கிறதோ அந்தந்த வங்கிகளின் கணக்கில் அந்தப் பணத்தைச் சேர்த்துக் கொள்ளும். அன்றைய தினத்தின் இறுதியில் வங்கிகள் மற்ற வங்கிகளுக்கு எவ்வளவு கொடுக்க வேண்டும் என்பதை கணக்கிட்டு உடன்பாடு செய்து கொள்கின்றன.
மின் பண பரிமாற்றம் எனப்படும் இந்த தொழில்நுட்பம் மிகவும் சிக்கலானதும், பணம் ஈட்டக் கூடியதுமாகும். பல முன்னணி மென்பொருள் நிறுவனங்கள் இதை நடத்துகின்றன.
சரி, மென்பொருள் நிறுவனங்களுக்கு இதனால் எப்படி காசு கிடைக்கிறது ? இந்த தானியங்கி நிலையத்திலிருந்து செல்லும் கட்டளைகள் மென்பொருளோடு இணையாவிடில் ஒன்றுக்கும் உதவாது. இதன் பின்னால் இருக்கும் மென்பொருள் தான் வரும் தகவல்களைச் சரிபார்த்தல், பணம் பட்டுவாடா செய்ய உத்தரவிடுதல், மீதம் கணக்கிடுதல் என ஒட்டுமொத்தப் பணியையும் செய்கிறது. அனைத்து விவரங்களையும் மென் கோப்புகளில் சேமித்தும் வைக்கிறது. இந்த சுவிட்ச் எனப்படும் இந்த மென்பொருளுக்குள் வரும் தகவல்கள், அல்லது விண்ணப்பங்களுக்கு ஏற்ப மென்பொருள் நிறுவனம் வங்கிகளிடம் பணம் பெற்றுக் கொள்கின்றன.
அதாவது நீங்கள் பத்து முறை பணம் எடுக்கிறீர்கள் என்றால் மென்பொருளுக்குக் கிடைப்பது பத்து தகவல்கள். ஒவ்வொரு தகவலுக்கு ஒரு குறிப்பிட்ட தொகை மென்பொருள் நிறுவனத்துக்குச் செல்லும். தினமும் பல ஆயிரக்கணக்கான தானியங்கிகளில் நிகழும் இந்த பரிவர்த்தனை மூலம் பல கோடிக்கணக்கான பணம் மென்பொருள் நிறுவனங்களுக்குப் போய் சேர்கிறது. இதற்காகத் தான் ஆயிரக்கணக்கான மென்பொறியாளர்கள் பணியாற்றுகின்றனர். அதிலும் ஒவ்வொரு வங்கிக்கும் உரிய பிரத்தேக சட்டங்களின் அடிப்படையில் மென்பொருள் இயங்குவது தான் முக்கியம். குறிப்பாக சில வங்கிகள் ஒரு நாள் பத்தாயிரம் ரூபாய் மட்டுமே
ஏடிஎம் வழியாக எடுக்க அனுமதிக்கும். சில வங்கிகள் ஐம்பதாயிரம் ரூபாய் வரை அனுமதிக்கும். இதற்குத் தக்க படி மென்பொருள் தயாராக்கப் பட வேண்டும்.
அமெரிக்காவில் இருபத்து ஐந்திற்கும் முப்பத்து நான்கிற்கும் இடைப்பட்ட வயதுடையவர்களில் அறுபது சதவீதம் பேர் மாதம் எட்டு முறை ஏடிம் இயந்திரத்தைப் பணம் எடுக்க நாடுகிறார்களாம். பெரும்பாலான ஏடிஎம் நிலையங்களில் வெள்ளிக்கிழமைகளில் தான் அதிக பரிவர்த்தனை நடக்கிறதாம்.
ஏடிஎம் அட்டையைப் பயன்படுத்துபவர்கள் மற்றவர்களை விட இருபது முதல் இருபத்து ஐந்து சதவீதம் வரை அதிகமாகச் செலவழிக்கிறார்களாம்.
ஏடிஎம் அட்டைக்கு மிக முக்கியமானது பின் எனப்படும் சங்கேத எண். இது தானியங்கியில் அளிக்கப்பட்டவுடன் குறியீடுகளாக மாறிவிடும். அதன் பின் யாரும் அதை திருட முடியாது.
ஆனால் அது நம்மிடம் இருக்கும் வரை அதை நாம் தான் பாதுகாக்க வேண்டும். இல்லையேல் இழப்பு நமக்கு தான். அட்டையும் எண்ணும் கிடைத்துவிட்டால் யார் வேண்டுமானால் நம் வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுக்க முடியும். இணையத்திலும் பொருட்கள் வாங்க முடியும்.
சங்கேத எண்ணை பத்திரமாய் வைத்திருக்க சில விஷயங்களைக் கவனத்தில் கொண்டால் போதும்.
சங்கேத எண்ணை எழுதி வைக்கக் கூடாது.
மறந்து விடுவோம் எழுதியே ஆகவேண்டும் என விரும்பினால் அதை வீட்டில் எங்காவது பத்திரமாய் எழுதி வைக்க வேண்டும்.
பர்சிலோ, ஏடிஎம் அட்டை இருக்கும் இடங்களிலோ வைக்கவே கூடாது.
சங்கேத எண் உங்களோடு தொடர்பற்றவையாக ஆனால் உங்களால் மறக்க முடியாததாக இருக்க வேண்டும்.
குறிப்பாக உங்கள் பிறந்த நாள், தொலைபேசி எண் போன்றவை இல்லாமல் இருத்தல் நலம்.
சங்கேத எண்ணை எழுதி வைக்கும்போது கூட அதை உங்களுக்கு மட்டுமே புரியும் சங்கேத மொழியிலேயே எழுதி வைக்கலாம்.
சங்கேத எண்ணை பயன்படுத்தும் போது தானியங்கிக்கு மிகவும் அருகாக குனிந்து மற்றவர்கள் பார்க்காத படி எண்களை பயன்படுத்த வேண்டும். குனிந்தபடி எண்ணை பயன்படுத்துவது ரகசியக் காமராக்களிடமிருந்து பெரும்பாலும் தப்ப வைக்கும்.
பணம் எடுத்ததும் உடனே பாக்கெட்டில் பாதுகாப்பாக வைத்துவிட்டு சென்று விடுங்கள். வீட்டில் சென்று எண்ணிப்பாருங்கள். எப்படியானாலும் தவறு நிகழ்ந்தால் அதை சம்பந்தப்பட்ட வங்கிக்குத் தான் தெரியப்படுத்த வேண்டும் எனவே தானியங்கி முன்னால் நின்று எண்ணிக்கொண்டிருப்பது தேவையற்றது.
யாராவது உங்களைத் தாக்கக் கூடும் எனும் பயம் தோன்றினால் ”கேன்சல்” பட்டனை அமுக்கி விட்டு பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று கிளம்புங்கள்.
இரவு நேரங்களில் ஏடிஎம் பயன்படுத்த வேண்டியிருந்தால் ஆள்நடமாட்டம் அதிகமாக இருக்கும் இடங்களிலுள்ள ஏடிஎம் களைப் பயன்படுத்துங்கள்.
முக்கியமாக அட்டையின் பின்னால் இருக்கும் தொலைபேசி எண்ணை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். அட்டை தொலைந்ததை அறிந்தால் உடனே அந்த எண்ணுக்குத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவியுங்கள். உடனே உங்கள் அட்டையின் எண் ”ஏமாற்று” வரிசையில் சேர்க்கப்படும். அதன்பின் அந்த அட்டையை யாராவது பயன்படுத்தினாலும் அது ”ஏமாற்று வேலை” என்னும் முத்திரை இருப்பதால் நிராகரிக்கப்படும்.

பத்து நாட்களில் கார் ஓட்டுவது எப்படி? - 10


”சார். இன்னைக்கு கடைசி நாள். என்ன பண்ணலாம்?”


சந்தானம் ஸ்டைலில் மட்டன் பிரியாணி பண்ணலாமான்னு கேட்க நினைத்து, அப்புறம்,


“நீயே சொல்லு”ன்னுட்டேன்.


“கடைசி ஆசை. நீங்க சொல்லுங்க”


இதென்ன, தூக்கு தண்டனையா?


“சரி. டிராபிக்ல போயி ஓட்டுவோம். அப்புறம் மெயின் ரோட்டுலயே ரிவர்ஸ் எடுப்போம். ஒ.கேவா?”


ஒ.கே. ரைட்.


அப்படியே ஒரு பெரிய ரோட்டுல போயி செய்தோம்.


முடிக்கறதுக்கு முன்னாடி சில முக்கியமான விஷயங்கள்.


1) எப்பவும் காரை எடுக்கறதுக்கு முன்னாடி எல்லா லைட், இண்டிகேட்டரையும் போட்டு பார்த்திடுங்க. காரை சுத்தி ஒரு ரவுண்ட் போயிட்டு பெட்ரோல் லீக் ஆகுதா, டயருல காத்து இருக்கான்னு பார்த்திடுங்க.
2) ஏறுனவுடன் கண்ணாடியை சரி பண்ணிடுங்க. மறக்காம, சீட் பெல்ட் போடுங்க.
3) போகும்போது 10 நொடிக்கு ஒருமுறை எல்லா கண்ணாடியையும் பாருங்க. அதே மாதிரி, ஸ்டாப் பண்ணிட்டு கிளம்பும்போதும் எல்லா கண்ணாடியும் பாருங்க.
4) முன்னாடி நிக்குற வண்டி கிளம்புனதுக்கு அஞ்சு செகண்ட் கழிச்சு கிளம்புங்க.
5) தொலைதூர பயணத்தின் போது, நாலு மணி நேரத்திற்கு ஒருமுறை ஓய்வு எடுப்பது அவசியம்.
6) திரும்பும்போது, ஒரு முப்பது மீட்டருக்கு முன்னாடியே இண்டிகேட்டரை போட்டுடுங்க. இடது பக்கம் திரும்பறதோட, வலது பக்கம் திரும்பும் போது ரொம்ப கவனமா இருக்கணும். ரோட்டுக்கு நடுவே இருக்குற கோட்ட தாண்டுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
7) முடிஞ்சளவு சீக்கிரம் கிளம்புங்க. அதன் மூலம் மிதமிஞ்சிய வேகத்தை தவிர்க்கலாம். கட்டுபாடற்ற வேகத்தை தவிர்த்தாலே, எல்லோருக்கும் நல்லதுதான்.
8) எந்த அளவு வேகமா போறோமோ, அதுக்கு ஏத்தமாதிரி பிரேக் பிடிக்க வேண்டிய தூரம் மாறுபடும். அது கவனத்துல இருக்கணும்.
9) எப்பவும் ரோட்டுல போற மத்தவங்க, எந்நேரமும் எந்த தப்பும் செய்வாங்கங்கற நினைப்பு இருந்திச்சுன்னா, நாமா கொஞ்சம் சேஃபா இருக்கலாம்.
10) கார் ஓட்டும்போது தயவுசெய்து போன் பேசாதீங்க.




கார் டிரைவிங் டிரெயினிங் ஒவர். இன்னும் இருபது நாள் கழிச்சு போயி லைசன்ஸ் எடுத்திடலாம்.


“ஏதும் ஹெல்ப் வேணும்னா கால் பண்ணு. எனக்கு ஏதும் வேணும்ன்னாலும் நான் கால் பண்றேன். பார்க்கலாம், பை.”.


-------------


கார்கள் உடனான மனிதனின் மனநிலையை பார்ப்போம். படிக்காதவன் படத்தில் ரஜினி காருடன் ”ல‌க்ஷ்மி, ல‌க்ஷ்மி”ன்னு பேசுவார். நிஜமாவே அந்த மாதிரி பேசுறவங்க இருக்காங்க.


காருக்கு ஏதேனும் ஒண்ணுனா துடிதுடிச்சு போயிடுவாங்க. அப்படி இருக்கறது சரியா?


கண்டிப்பா இல்லை. சிவாஜி போன்ற முன்னணி நடிகர்கள் அந்த காலத்தில் அந்தஸ்த்தின் அடையாளமாக இம்பாலா கார் வைத்திருந்த போது, எம்.ஆர். ராதா அதில் வைக்கோல் ஏற்றி “கார் ஈஸ் ஜஸ்ட் எ கார்”ன்னு காட்டிட்டு இருந்தார்.


அது மாதிரி எல்லோராலையும் இருக்க முடியாதுங்கறதுதான் உண்மை. பல கார்கள் வாங்குற நிலையில இருக்கறவுங்க அப்படி பண்ணலாம். வாழ்நாள் கனவா ஒரு கார் வாங்குறவன்? ஒரு கோடு கூட விழாம பாத்துக்கத் தான் ஆசைப்படுவான். எல்லாம் ஒரு அளவோட இருந்தா நல்லதுதான். அவ்ளோ தீவிரமா இருக்குறவுங்க, சக மனுசன் மேலயும் அதே அளவு அன்போட இருந்தா எந்த பிரச்சினையும் இல்ல.


--------------


இந்த பதிவில் கார் ஓட்டுவதற்கான எல்லா பயிற்சியை பற்றியும் சொல்லியிருப்பேன் என்று கிடையாது. நான் கார் ஓட்டிய அனுபவமே இது. விட்டு போனவற்றை நண்பர்கள் சொன்னால், தெரிந்து கொள்ள நல்லா இருக்கும்.


பின்னூட்டங்களில் பல நல்ல தகவல்களை அளித்த DHANS மற்றும் அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.


(முற்றும்)

பத்து நாட்களில் கார் ஓட்டுவது எப்படி? - 9


இன்னைக்கி அவன் நேத்து சொன்ன மாதிரி மெயின் ரோட்டுக்கே போயிடலாம்ன்னு மெயின் ரோட்டுல இறங்கிட்டோம். காலையிலே அவ்வளவா டிராபிக் இல்லை. திரும்ப வரும்போது வந்திடும்.

அவன் கடை இருக்குற தெருவுல உள்ள பண முதலைகள பத்தி சொன்னான். பார்க்கத்தான் தெரு சாதாரணமா இருக்கு. ஏகப்பட்ட கோடிஸ்வரர்கள் இருக்காங்களாம். பணத்த என்ன பண்றதுன்னு தெரியாம்ம சினிமாவுல எல்லாம் போட்டு தொலைக்குறவுங்க பலர் இருக்காங்களாம். நான் கூட பயந்து போற மாதிரியான முகத்தோட சில சினிமா பேனர்கள் பாத்திருக்கேன்.

அந்த மாதிரியான ஒரு குடும்பத்தோட கதையை சொன்னான். பழைய தமிழ் சினிமா மாதிரி இருந்திச்சி. ஒரு ஊர்ல ஒரு கோடிஸ்வரராம் (அந்த முட்டு சந்துலதான்). அவருக்கு ஒரு கேடி பையன்னாம். எப்பவும் போதையிலயே சுத்துவானாம். அந்த பக்கம் இருக்குற, ஒரு சாப்ட்வேர் கம்பெனி முன்னாடி நின்னு வர போற பொண்ணுகள எல்லாம் பார்ப்பானான். பிடிச்ச பொண்ண தள்ளிட்டு போயிடுவானாம். ஒரு பெரிய வீட்டு பொண்ண கல்யாணம் பண்ணி வச்சாங்களாம். அப்புறம் அதையும் ஏதோ பிரச்சினையில கொன்னுட்டாங்களாம். அந்த பையனும் எய்ட்ஸ் வந்து செத்துட்டானாம்.

சே. இவன் உண்மையை சொல்றானா? இல்ல, கதையை அடிச்சி விடுறானா? என் முகத்தை பார்த்தா என்னன்னு தெரியுது?

இவனுக்கு ரியல் எஸ்டேட் ஆளுங்க கூட சகவாசம் இருக்குறதால, பண பரிமாற்றம் நடக்குற இடங்களுக்கு எல்லாம் போயிருக்கானாம். மூட்டையில லட்சக்கணக்கான பணத்தோட, ரவுடிகளோட காருல போன கதையை சொன்னான். கதை நல்லா இருந்திச்சு!

மெயின் ரோட்டுல ஒரு இடத்துல யூ டர்ன் அடிச்சேன். அடிக்கும்போது வண்டி ஆப் ஆகிடுச்சி. கூட்டம் இல்லாததால அவசரமோ, பதட்டமோ இல்லை. ஆன் பண்ணி திருப்பிட்டு வந்துட்டேன்.

வரும்போது, நிறைய பஸ், கார்களெல்லாம் போயிட்டு இருந்துச்சி. அதுக்கு இடையில போனது கொஞ்சம் திரில்லாத்தான் இருந்துச்சி.

டிராபிக்ல போகும் போது, ஸ்டியரிங்க கொஞ்சம் திருப்புறதுக்கும் கவனம் தேவை. எந்த பக்கம் இருந்தும் எது வேண்டுமானாலும் வரலாம்.

வண்டி எங்கயாவது பிரேக் டவுன் ஆச்சுனா, ரோட்டின் இடதோரத்தில் முதல்ல நிறுத்துங்க. உங்களுக்கு கார பத்தி தெரிஞ்சுதுனா, சரி பண்ண முயற்சி பண்ணுங்க. தெரியாம, கார்ல கைய வச்சிங்கன்னா, உங்களுக்கும் பிரச்சினை. காருக்கும் பிரச்சினை. முடிஞ்சவரை சின்ன சின்ன விஷயங்களை தெரிஞ்சுக்கோங்க. இல்லாட்டி, கார் கம்பெனியோட சர்வீஸ் சென்டருக்கு போன் பண்ணி விஷயத்தை சொல்லுங்க. எல்லா கார் கம்பெனியும் இருபத்தி நாலு மணி நேர சேவை தராங்க. மாருதி, டாடா, ஹூண்டாய்ன்னா, சர்வீஸ் சென்டர்கள் இந்தியா முழுவதும் அதிகமா இருக்கு. இது தவிர, இன்னும் சில தனியார் சேவை மையங்கள் இருக்கின்றன. ஆண்டு சந்தா கட்டினோமானால், இடத்துக்கே வந்து சரி செய்து விட்டு செல்வார்கள். சிட்டி என்றால் வசதி அதிகம்.

“கார்ல திடீர்ன்னு பிரேக் பிடிக்காம போயிடுச்சின்னா என்ன பண்றது?”

“முதல்ல பயப்படாதீங்க. ஆக்ஸிலேட்டர்ல இருந்து கால எடுங்க. கியரை கொஞ்சம் கொஞ்சமா குறைங்க. ஸ்பிட் குறைஞ்சோன, ஹேண்ட் பிரேக் போட்டு வண்டிய ஓரம் கட்டுங்க”

அப்ப பழைய ரஜினி படங்களில் (துடிக்கும் கரங்கள்ன்னு நினைக்கிறேன்) காட்டுற மாதிரி ரோட்டோரத்தில் இருக்குற கல்லுல மோதி நிறுத்த வேண்டாமா?!!!

”டயர் வெடிச்சுதுன்னா, ஸ்டியரிங்க கண்ட்ரோல் பண்றது ரொம்ப கஷ்டம். ரொம்ப சிக்கலான நிலைமை அது. வண்டி கன்னாபின்னான்னு போகும். ஸ்டியரிங்க டைட்ட பிடிச்சிக்கிட்டு, வண்டி நிறுத்துற வழியை பாருங்க.”

இதுக்கெல்லாம் பிராக்டிஸ் தர மாட்டாங்களோ?

இன்னைக்கு கார் ஓட்டிட்டு முடிச்சிட்டு போகும்போது அவன், “சார், நாளைக்கு கடைசி நாள்”ன்னான்.

“ம். எப்படிப்பா ஓட்டுறேன்?”

“ம்ம்ம்.... நல்லா ஓட்டுறீங்க சார்”

(தொடரும்)

பத்து நாட்களில் கார் ஓட்டுவது எப்படி? - 8


இன்னைக்கு ஃபுல்லா ரிவர்ஸ் பண்ணி பிராக்டிஸ் பண்ணனும்ன்னு நினைச்சிருந்தேன். அவன் மெயின் ரோடு போகலாமான்னு கேட்டான். நான் ரிவர்ஸ் போறத பத்தி சொன்னேன். ஒகேன்னு கூட்டிட்டு போனான்.

பல விதமா ரிவர்ஸ் எடுத்தேன். லெப்ட் சைடு ரிவர்ஸ். ரைட் சைடு ரிவர்ஸ். எந்த பக்கம் ரிவர்ஸ் எடுத்து திருப்புறோமோ, அந்த பக்கம் ரோட்டுல வண்டி இருக்குற மாதிரி இருந்திச்சுனா நல்லதாம்.

பின்னாடி வண்டிய எடுக்கும்போது, நல்லா திரும்பி பின் கண்ணாடி வழியா வெளியே பார்க்கணும். நல்லா திரும்ப முடியாட்டி, ஸ்டியரிங்ல இருந்து ஒரு கைய எடுத்து கியர் மேலே வச்சா நல்லா திரும்ப முடியும். ஸ்ட்யரிங்க்கு ஒரு கை போதும்.

நான் வண்டி ஓட்டுற இடத்துல ஒரு ஜெயில் இருக்கு. வெள்ளை டிரெஸ் போட்டுட்டு சில பேரு குறுக்க வந்திட்டு இருந்தாங்க.

“யாரு இதெல்லாம்? வார்டனா?’

“கைதிங்க”

“என்னது? வெளியே சுத்திட்டு இருக்காங்க.”

“நல்ல கைதிங்க சார். உள்ள இருக்கும்போது பார்ப்பாங்க. நல்லபடியா இருந்தாங்கன்னா, வீட்டு வேலைக்கு கூட்டுட்டு போவாங்க. தப்பிச்சி எல்லாம் போயிட மாட்டாங்க”

உண்மைய சொல்றாரா? இல்ல?...

”சில சமயம், ஊரு சுத்தி பார்க்க கூட கூட்டிட்டு போவாங்களாம்”

சூப்பரு.

அப்பப்ப, மேட்டுல நிறுத்தி பிரேக் பிடிக்காம கிளட்ச்ச விட்டு ஸ்டார்ட் பண்றதையும் பிராக்டிஸ் பண்ணினேன்.

அப்புறம், பார்க்கிங் பத்தி சொன்னான். நம்ம நாட்டுல காரை பக்கவாட்டுல நிறுத்துற மாதிரியான பார்க்கிங்தான் பொதுவா இருக்கும். அதாவது ரோட்டோரத்தில் ஒரு கார் பின்னாடி இன்னொரு கார் இருக்குற மாதிரி. சில வெளிநாடுகளில் நாமெல்லாம் பைக் நிறுத்துவது மாதிரியான கார் பார்க்கிங் இருக்குமாம். அது சுலபமா தெரிஞ்சாலும், இட வசதி இல்லாவிட்டால் திருப்புவதற்கு கஷ்டமாம்.

நம் நாட்டில் உள்ள பார்க்கிங்கிற்கு முன்னால் சென்று, பின்பு பின்னால் வந்து ஏற்கனவே நின்று கொண்டிருக்கும் கார்களுக்கு இடையே நிறுத்தி விட வேண்டும். அப்படி நிறுத்தி பழகுவதற்கு, நமக்கென்று சில கால்குலேஷன் வைத்திருக்க வேண்டும். அதாவது, எவ்வளவு தூரம் முன்னால் செல்ல வேண்டும். எங்கிருந்து பின்னால் வர வேண்டும். எந்த இடத்தில திரும்ப வேண்டும். எப்போது நிறுத்த வேண்டும், போன்றவற்றை நமது காருக்கு ஏற்றவாறு தெரிந்து வைத்திருந்தால் சுலபமாக பார்க் பண்ணிவிட்டு வந்த வேலையை பார்க்கலாம். நேரே சென்று இரு கார்களுக்கு இடையே விடுவது சான்ஸே இல்லை.

பார்க் பண்ணியவுடன் ஹண்ட் பிரேக்கை போட்டு விட்டு செல்லவும். சிலர் ஃபர்ஸ்ட் கியரையும் போட்டு விட்டு செல்வார்கள். (திரும்பி வந்து எடுக்கும்போது கவனம் தேவை. இல்லாவிட்டால், கார் பார்க்கிங் மறக்க முடியாத நிகழ்வாகிவிடும்)

ரொம்ப முக்கியம், காரை லாக் செய்து கீயை எடுத்துட்டு போகவும். அதை போட்டுட்டு போயிடுடாதீங்க.

(தொடரும்)

பத்து நாட்களில் கார் ஓட்டுவது எப்படி? - 7


"இன்னைக்கி எங்க சார் போலாம்?”

“நீயே சொல்லு. நான் நல்லா திருப்பி திருப்பி ஓட்டணும்ன்னு நினைக்கிறேன்.”

“ஓகே. கிளம்புங்க”

“எங்க?”

“அந்த பக்கம் ஒரு லே-அவுட் இருக்கு. அங்க போலாம்.”

அது ஒரு புதியதாக உருவாகிக்கொண்டிருக்கும் லே-அவுட். சின்ன சின்னதாக நிறைய சாலைகள். வீடுகள் குறைச்சல்.லெப்ட்-ரைட்ன்னு ஸ்டியரிங்க ஒடிச்சி ஒடிச்சி ஓட்டுனேன். முக்கியமா தெரிஞ்சிக்கிட்டது, ஒரு திருப்பத்தில் திரும்பிய உடன், வீலை உடனே சரி செய்திட வேண்டும். இல்லாவிட்டால் ஏதேனும் ஆபத்து நேரிடலாமாம். ரொம்ப வேண்டி கேட்டு கொண்டான்.

பின்னாடி ரிவர்ஸ் எடுக்கும்போது திரும்பி பின் கண்ணாடி வழியாவும் பார்க்கணுமாம். சைட் கண்ணாடி வழியாவும் பார்க்கணுமாம். ரிவர்ஸ் பண்ணதுக்கப்புறம் மறக்காம, கியரை மாத்திடுங்க. நான் சில நேரங்களில் மறந்திட்டேன்.

கார்ல உள்ள நவீன தொலைநுட்பங்கள் பத்தி பேசினோம். அவன் ஒரு மந்திரி கார் பத்தி சொன்னான். மந்திரியின் செலவுகள் பத்தி சொன்னான். பிறகு, அவன் பண்ணும் செலவுகள் பத்தி சொன்னான்.

“எங்க அப்பா நான் ஸ்கூல்ல படிக்கும்போது அடிக்கடி ஐம்பது ரூபாய் கொடுப்பாரு. நான் நல்லா செலவு பண்ணுவேன். என்ன, நல்லா சாப்பிடுவேன். வேற எந்த கெட்ட பழக்கமும் இல்ல.”

“ம்ம்ம்”

“எங்க அப்பா நல்லா படிக்கல. பசங்களாவது நல்லா படிக்கணும்ன்னு நினைச்சாரு. எங்க அண்ணன் பத்து வரைத்தான் படிச்சான். என்னை ரொம்ப நம்பினாரு. நானும் சரியா படிக்கலை. எனக்கு ஒண்ணும் இல்லை சார். ஒரு சாப்ட்வேர் கம்பெனியில ஏதாவது ஒரு வேல பார்க்கணும். சம்பளம் ரொம்ப எல்லாம் வேண்டாம். ஒரு பத்து பதினைஞ்சி போதும்.”

இப்பவே அவ்வளவு சம்பாதிப்பதாக சொல்லியிருந்தான். பார்த்தேன் அவனை.

“ஒரு நாளு எங்க அப்பாவை ஆபிஸ் கூப்பிட்டுட்டு போயி சாப்பாடு வாங்கி கொடுக்கணும். அது போதும் சார்.”

அவுங்க வீட்டுல வசதியாத்தான் இருக்காங்க. என்ன, குடும்பத்துல படிச்சி யாரும் பெருசா ஆகலைன்னு ஒரு வருத்தம். அவன் அண்ணன் பையனை ஸ்கூல்ல சேர்க்கும்போது பெற்றோர்கள் படிச்சி இருக்கணும்ன்னு சொல்லி இருக்காங்க. அப்ப இருந்து, அவனுக்கு அதுக்காகவாவது படிச்சிருக்கணும்ன்னு ஒரு எண்ணம்.

“ஒரு பொண்ணு பார்த்தாங்க சார், எனக்கு”

“ஓ! அப்படியா? என்ன ஆச்சு?”

“அது படிச்ச பொண்ணு. அதுக்கு பையன் பார்க்க எங்க அப்பாக்கிட்ட சொல்லியிருக்காங்க. அப்புறம் அவுங்களே உங்க பையன் இருக்கானே?. அவனுக்கே பண்ணிடுவோம்ன்னு சொல்லியிருக்காங்க. பொண்ணு பேங்க்ல வேலை பார்க்குது. என்னோட ரெண்டு வயது அதிகம்”

ஆச்சரியத்துடன், “வயசு பரவாயில்லையா?”

“எங்க அப்பாவுக்கு ஒகே. அந்த பொண்ணு வீட்டுல எக்கச்சக்கமா நிலம் இருக்கு. ஐம்பது லட்சம் தேறும். கல்யாணத்துக்கப்புறம் எனக்கு ஏதாச்சும் பிஸினஸ் செஞ்சு வைப்பாங்கன்னு எங்க அப்பா நினைக்குறாரு.

”அப்புறம்?”

“எங்க அம்மாவுக்கு பிடிக்கலை. அவ்ளோத்தான்.”

என் டிரைவிங்ல உள்ள குறைகள பத்தி கேட்டேன். சொன்னான்.

1) ஊருக்குள்ள போகும்போது, ஹாரன் அடிக்கவே மாட்டேங்கறேனாம்.
2) திரும்பும்போது, உடனே வீலை நேராக்க மாட்டேங்கறேனாம்.
3) பிரேக் போடும்போது பின்னாடி என்ன வருதுன்னு பார்க்க மாட்டேங்கறேனாம்.

முத பிரச்சினை, ஜுஜுபி. வேணும்ன்னுதான் அடிக்கலை. எதுக்கு ஓவரா இதெல்லாம்ன்னு விட்டுட்டேன். சரி பண்ணிடலாம். ரெண்டாவது, கூடிய சீக்கிரம் சரி பண்ணிடலாம். இன்னிக்கே, இந்த பிராப்ளம் ஓரளவுக்கு இல்ல. மூணாவதுதான், எனக்கு சரியா பிடிப்படல. சடன் பிரேக், முன்னாடி ஏதாச்சும் வேகமா வருறதாலத்தான் போடுறோம். அந்த நேரம் எப்படி பின்னாடி பார்க்குறது? ஏன், இதையே அடிக்கடி சொல்றான்?

அப்படி அத பத்தியே பேசினேன். அவன் ஒருமுறை எங்கோ குடும்பத்துடன் வெளியூர் செல்லும்போது, அவன் சடன் பிரேக் போடும்போது பின்னாடி வந்த லாரி இடிச்சிடுச்சாம். இடுச்சதுல, பின் கதவு ஜாம் ஆகிடுச்சாம். கிட்டத்தட்ட இருபதாயிரம் செலவாம்.

ஓ! அதனாலதானா?

(தொடரும்)

பத்து நாட்களில் கார் ஓட்டுவது எப்படி? - 6


கத்து கொடுக்குற பையன் ரெண்டு நாளு வரல. முத நாளு கோவிலுக்கு போறேன்னு சொன்னான். ரெண்டாவது நாளு, இப்பதான் காலைல நாலு மணிக்கு திருவண்ணாமலைல இருந்து வந்தேன்’ன்னு சொன்னான்.

“திருவண்ணாமலை எப்படி இருந்திச்சி?”

“நல்லா இருந்திச்சி சார். காலெல்லாம் வலி.”

“கிரிவலமா?”

“ஆமாம் சார். அப்புறம் மலை மேலேயும் ஏறுனேன்.”

”ஓ! அப்படியா?”

கோவிலை அவன் கேமராவில் மலை மேலிருந்து படம் எடுத்திருந்தான். நல்லா இருந்திச்சி.

இன்னைக்கி யூ டர்ன், ரிவர்ஸ் அடிக்கிறது எல்லாம் பிராக்டிஸ் பண்ணலாம்ன்னு நினைச்சிருந்தேன். பண்ணலாமா?ன்னு கேட்டேன். சிட்டிக்குள்ள போலாமா?ன்னு அவன் கேட்டான்.

“ம்ம்... போலாமே”

“போயிட்டு காருக்கு பெட்ரோலும், கேஸும் அடிச்சிட்டு வந்திடலாம். ரெண்டு மணி நேரம் ஆகும். பரவாயில்லையா?”

கரும்பு தின்ன கூலியா? எக்ஸ்ட்ரா ஒரு மணி நேரம் காரு அதுவும் சிட்டிக்குள்ள ஓட்டுறதுன்னா கசக்கவா போகுது?

ரைட்... ரைட்...

போற வழியில ஏகப்பட்ட ஸ்பிட் பிரேக்கர்ஸ். கிளட்ச் பிடிச்சி ஸ்பிட் குறைச்சு, கியர் மாத்தி போறது இப்ப கொஞ்சம் சரளமாத்தான் வருது. உண்மையிலே கார் ஓட்ட பத்து நாளு தேவையில்லை.

மூணு-நாலு நாளு போதும். அதுக்கு மேலே, அவுங்க மேற்பார்வையிலே நாமளேதான் கார் ஓட்டுறோம்.

“தர்மஸ்தலா போயிருக்கீங்களா?”ன்னு கேட்டான்.

“இல்லையே”

“போயிட்டு வாங்க, சார். அருமையான கோயில்.”

“ஓ”

“எந்நேரமும் சாப்பாடு கிடைக்கும். சாப்பாடு சூப்பரா இருக்கும். அந்த சாம்பார் தண்ணியாத்தான் இருக்கும். ஆனா, அந்த டேஸ்ட் லட்சம் ரூபாய் கொடுத்தாலும் வராது. ரெண்டு நாளு மேலே அங்க இருக்க முடியாது”

”ஏன்?”

“அவுங்களே செலவு செய்து உங்கள ஊருக்கு அனுப்பிடுவாங்க. அந்த கோவிலுல இருக்குற எல்லோருமே ஹெல்ப் பண்ணுவாங்க. பஸ் டிக்கெட் கூட அந்த ஊருக்கு கம்மிதான்”

சின்ன வயசிலேயே பக்திமானா இருக்கானே? நிறைய கோவிலுக்கு போறான். சமீபத்தில் வேலூர் தங்க கோவிலுக்கும் போயிருக்கான். தர்மஸ்தலா போயிட்டு வந்ததுக்கப்புறம்தான் அவனுக்கு எல்லாமே பாசிட்டிவா நடக்குதான். எப்படியோ பாசிட்டிவ் உணர்வு வந்துச்சுன்னா போதும். நம்ம வேலைகளின் முடிவுகளை பாசிட்டிவ்வுக்கு கொண்டு வந்திடலாம்.

பெட்ரோல் பல்க்க்கு முன்னாடியே, அவன் நான் வண்டியை ஓட்டுறேன்னு சொன்னான்.

“நானே ஓட்டுறேனே?”

“இல்ல. உள்ளே ஏத்தி திருப்புறது கொஞ்சம் கஷ்டம்”

ஓகே. இதுவரைக்கும் கார்ல போறப்ப, சும்மா பாட்டு கேட்டுட்டு, வெளியே ’இயற்கை’யை ரசிச்சிட்டு வருவேன். இன்னைக்கு கொஞ்சம் தூரம் அவன் ஓட்டுன டிரைவிங்க பார்த்திட்டே வந்தேன்.

சே. நான் எவ்ளோ கேவலமா ஓட்டுறேன்!

நான் கார் ஓட்டும்போது, ஆக்ஸிலேட்டர ஏதோ அதுக்கு வலிச்சுட போகுதோங்குற மாதிரி மெதுவா மிதிப்பேன். இவன் தையல் மிஷின் மாதிரில்ல மிதிக்குறான் (பழைய வண்டி). நாமளும் மிதிச்சிட வேண்டியதுதான். நல்லா ஓட்டுறாயான்.

பெட்ரோல் போட்டத்துக்கப்புறம் நான் ஓட்ட ஆரம்பிச்சேன்.

ஒரு இடத்துல, ஒரு நாய் குறுக்க வந்தது. சல்லென்னு பிரேக்க பிடிச்சேன். நாய் தப்பிச்சிருச்சி.

“ஏன் சார் இப்படி பிரேக் பிடிக்கிறீங்க? இப்படியெல்லாம் பண்ணாதீங்க. அது எப்படியும் போயிடும். நீங்க ஸ்லோ பண்ணினா போதும். பின்னாடி வண்டி வந்திச்சின்னா என்ன பண்ணுவீங்க?”

ஒகே. அடுத்த முறை கொஞ்சம் கவனமா செய்யணும்.

திரும்பி வரும்போது, அவன் படிப்ப பத்தி சொன்னான். பிசிஐ படிக்கலாம்ன்னு ஐடியாவாம். சாப்ட்வேர் பத்தி கேட்டான். எனக்கு தெரிஞ்ச கதையை சொன்னேன். விளக்கமா கேட்டான். அவன் பேங்க் வெப்சைட் எல்லாம் யூஸ் பண்ணியிருக்கறதா ஏற்கனவே சொல்லியிருக்கான். அதனால அதை உதாரணமா வச்சி சொன்னேன். ரொம்ப ஆச்சரியமா,அவ்ளோ பண்ணலாமான்னு கேட்டான். இதுக்கே இப்படியான்னு, இன்னும் ஜனரஞ்சகமா ஆச்சரியத்தை கிளப்புவோம்ன்னு மல்டிமீடியா, அனிமேஷன் மென்பொருட்கள் பத்தி சொன்னேன். அங்க ஆரம்பிச்சது ரஜினியோட சுல்தான்கிட்ட வந்து நின்னது.

நான் சொல்லி அவனுக்கு தெரியாதது, அவனுக்கு ஆச்சரியம். அவன் சொல்லி எனக்கு தெரியாதது, என்னோட ஆச்சரியம்.

புதுசா கார் ஓட்டுறவுங்களுக்கு ஆச்சரியப்படுற மாதிரி நான் ஒரு அறிவுரை சொல்லுறேன். கேட்டுக்கோங்க.

எதையும் கத்துக்கும்போது, முட்டி மோதி கத்துக்கலாம். ஆனா, காரை அப்படி கத்துக்காதீங்க. :-)

(தொடரும்)

பத்து நாட்களில் கார் ஓட்டுவது எப்படி? - 5


இத்தினி நாளு சின்ன சின்ன ரோட்டுல ஓட்டிட்டு இருந்தேன். இன்னைக்கு மெயின் ரோட்டுக்கு கூட்டுட்டு போனான், நம்ம டிரைவர். (நான் ’போனான்’ன்னு சொன்னாலும், டிரைவர்’ங்கற வார்த்தை மரியாதையா வந்திடுச்சே!) மெயின் ரோட்டுல ஓட்டும்போது அந்த அளவுக்கு ரொம்ப வேல இருந்த மாதிரி இல்ல. திரும்பும்போதுதான் கொஞ்சம் பார்த்து திரும்பணும்.

”இந்த ரோட்டுல திடீர்ன்னு நாயி குறுக்க வந்திருச்சினா என்ன பண்ணுறது?”

பாருங்க. எப்படி எல்லாம் கேள்வி கேட்கறேன்னு. அந்த ரோட்டுல மரணமடைந்து மறைந்த நாயிகள் ஏராளம். எல்லாம் தாரோடு தாராக சேர்ந்து மறைந்து விட்டது. கொஞ்சம் பார்த்து வரலாம். நாயிக்கு என்ன தெரியும்? நாயிக்கு சைடுதான் தெரியும். முன்ன இருக்குறது தெரியாதுன்னு சொல்லுவாங்க. நமக்கு எல்லா பக்கம் தெரிஞ்சுமே, பாட்டு கேட்டுக்கிட்டோ, போன்ல பேசிக்கிட்டோ இடிச்சிக்கிறோம்.

“ஏத்திருங்க”

“ஆங்?” வாயை பிளந்தேன்.

”நான் என்ன சொன்னாலும், உங்க காலு அந்த டைம் ஆட்டோமெடிக்கா பிரேக்குக்கு போயிடும். முன்ன பின்ன பார்த்து பிரேக் போடணும். எல்லாம் உயிருதான். சடன் பிரேக் போடும்போது, பின்னாடி ஏதாவது லாரி வந்துச்சுன்னா என்ன பண்ணுவீங்க? அதுவும் கவனத்துல இருக்கணும்.”

மூணாவது கியர், நாலாவது கியர் என்று மாத்தி மாத்தி ஓட்டினேன். அப்பப்ப, நிறுத்தி நிறுத்தி ஸ்டார்ட் பண்ணினேன்.

இன்னைக்கு எதுவும் புதுசா கத்துக்கலை. அவ்ளோதானா?

“எனக்கு வளைச்சி திருப்புறது, வண்டிய பொஸிசன் பண்ணுறது எல்லாம் சொல்லி தாப்பா?”

“நாளைக்கு பார்த்துருவோம் சார்”

பேசிட்டே ஓட்டிட்டு இருக்கோம். ஒருவேளை பேசிட்டே ஓட்டுறது எப்படின்னு சொல்லி தாறானோ?

திரும்பும் போது ஸ்பீட் கொஞ்சம் அதிகமாவே இருக்கு.

டெய்லி ஒரு மணி நேரம் டிரைவிங் சொன்னதுக்கு என் பிரண்ட் எனக்கு தெரிஞ்ச இடத்துல ரெண்டு மணி நேரம்ன்னு சொன்னான். பர்ஸ்ட்டு, யாராவது கத்துக்கும் போது பின்னாடி உக்கார்ந்து ஒரு மணி நேரம். அப்புறம் நமக்கு ஓட்ட ஒரு மணி நேரம்ன்னு சொன்னேன்.

நானும் நம்மாளுக்கிட்ட கேட்டேன். அதுக்கு அவன், அப்படியெல்லாம் ஓட்ட கூடாதுன்னு சொன்னான். அப்புறம், கத்துக்க வருறவுங்க சிலர் அதுக்கு ஒத்துக்க மாட்டாங்கன்னான். பிறகு, இன்னொரு காரணமும் இருக்குன்னான்.

“என்ன?”

“போன ரெண்டு உயிர்தானே போகும்?”

அடப்பாவி.

“நீ கத்துக்கொடுக்க போனப்ப, ஏதாச்சும் ஆக்ஸிடண்ட் ஆகிருக்கா?”

”இல்லங்க”

“ம்ம்ம்”

“ஆனா, எங்க மாஸ்டர் பண்ணிருக்காரு.”

“என்னாச்சி?”

“அவரு ஒரு கார ஓட்டும்போது, வீட்டுக்காரர் மேல ஏத்திட்டாரு.”

“அப்புறம்?”

“அவுரு அவுட்”

“என்னது?" எனக்கு தூக்கி வாரி போட்டது.


(தொடரும்)

பத்து நாட்களில் கார் ஓட்டுவது எப்படி? - 4


மணி ஆறறை. இன்னைக்கி குளிர் அதிகம். லேசா பனியும் இருக்கு. ஆனா இப்பவே, சில பொடிசுகள் கராத்தே கத்துக்க போயிட்டுயிருக்காங்க. கத்துக்கட்டும். கத்துக்கட்டும். நாம கார் ஓட்ட கத்துக்குவோம்.

ஸோ, இதுவரைக்கும் எல்லா பார்ட்ஸையும் பார்த்தாச்சு. அத எப்படி யூஸ் பண்ணுறதுன்னும் பார்த்தாச்சு. உங்களுக்கு இண்டிகேட்டர், ஹாரன், வைப்பர் பத்திலாம் சொன்னேனா? அத அவர் முத நாளே சொல்லிட்டாரு. நான் தான் மறந்திட்டேன்.

ஹாரன் - ஸ்ட்யரிங் மேலேயே இருக்கும்.இரண்டு கையாலையும் அடிக்க வசதியா ரெண்டு இருக்கும். எப்ப வேணா அடிச்சிகோங்க.

இண்டிகேட்டர் - வலதுபக்கம் ஸ்ட்யரிங் கீழே இருக்கும். மேலே தள்ளுனா, இடது பக்கம் லைட் எரியும். கீழே தள்ளுனா, வலது பக்கம் இண்டிகேட்டர் எரியும். லெப்ட் இண்டிகேட்டர் போட்டுட்டு, வலது பக்கம் கைய காமிச்சிட்டு, நேரா போயிட கூடாது.

ஹெட் லைட் - இண்டிகேட்டர் போடுறதுக்கு யூஸ் பண்ணுற குச்சியையே திருப்புங்க. பீமர் (மகாபாரதத்துல வர்றவரு இல்ல... லைட்ட மேல கீழே அடிக்க) யூஸ் பண்ண குச்சியை மேல தள்ளுங்க.

வைப்பர் - மழை பெயிறப்போ கண்ணாடில இருக்குற தண்ணிய துடைக்க கண்ணாடி மேலே ரெண்டு வைப்பர் இருக்கும். தூசியா இருக்கும் போதும், தண்ணி விட்டு கழுவிக்கலாம். அதுக்கு, ஒரு குச்சி ஸ்ட்யரிங் கீழே இடதுபக்கம் இருக்கும். அத வச்சியே, தண்ணியும் விட்டுக்கலாம்.

பேனெட் - முன்னாடி இருக்குற பேனெட்ட திறக்குறதுக்கு, டாஷ்போர்ட்ல வலது பக்கம் கதவு கிட்ட இழுக்குற மாதிரி ஒண்ணு இருக்குது. இன்ஜின்ல எதாச்சும் பார்க்கணும்னா, இத வச்சி பேனெட்ட திறந்து பார்க்கலாம்.

தவிர பேட்டரி, பெட்ரோல், ஹேன்ட் பிரேக் இதோட நிலவரங்களை காட்ட டாஷ்போர்டுல நிறைய ரெட் லைட் ஸாரி, சிவப்பு சிறு ஒளி அமைப்புகள் இருக்குது.

கிட்டத்தட்ட எல்லா ஐட்டங்களையும் பத்தி தெரிஞ்ச்சிக்கிட்டாதால பிராக்டிஸ் தான் தேவை.

இன்னைக்கு எங்கயும் ஆப் ஆகலை.

இன்னைக்கு ஓட்டிக்கிட்டே நிறைய பேசினோம். கத்துகொடுக்குற பையனுக்கு இருபத்தியொரு வயசுதான் ஆகுது. ஸ்கூல்ல பெயில் ஆகிட்டான். இப்ப, பாஸ் பண்ணி காலேஜ்ல கம்ப்யூட்டர் கத்துக்க ட்ரை பண்ணிட்டு இருக்கான். ஹார்ட்வேர் கத்துக்க ரொம்ப ஆர்வமா இருக்கான். இங்கிலிஷ்ல பேச மட்டும் கொஞ்சம் தயக்கமா இருக்கு போல. அதுலாம் பெரிய விஷயம் இல்லன்னு சொன்னேன்.(ஆமா... இவரு பெரிய...).

ரெண்டு மூணு டைம் யூ டர்ன் அடிச்சி பிராக்டிஸ் பண்ணினேன்.

முடிச்சிட்டு கிளம்பும் போது, முன்னாடி பேனட்டை திறந்து எல்லாத்தையும் பத்தி சொன்னான், நம்மாளு. இன்ஜின், ஸ்பார்க் பிளக், ரேடியேட்டர், ஃபேன், கியர் பாக்ஸ்ன்னு எல்லாத்தையும் காட்டினான்.

”ஒரு நாளைக்கு எத்தனை பேரு கார் ட்ரேயினிங் வாராங்க?”

“இப்ப மூணு பேருதான் வாராங்க. முன்ன பதினைஞ்சு பேரு கூட வந்து இருக்காங்க.”

“ஓ”

“இப்ப தான் ரொம்ப சோம்பேறி ஆகிட்டேன். முன்ன, நாலு மணிக்கே எந்திரிச்சு வேலைய ஆரம்பிச்சுடுவேன். அப்ப, சம்பளம் கூட வாங்கினத்தில்லை. இப்ப ஆறு மணி தான்.”

ஆறு மணிக்கு எந்திரிக்குற இவனே சோம்பேறினா, என்னை எல்லாம் என்னன்னு சொல்லுறது?ன்னு நினைச்சிக்கிட்டேன்.

சாதனையாளர்கள் எல்லோருக்கும் உள்ள ஒரு ஒற்றுமை, எல்லோருமே அதிகாலையில எந்திரிக்கறவுங்கன்னு படிச்சி இருக்கேன். நான் இன்னைக்கு காலையில பார்த்தவுங்க எல்லோருமே ரொம்ப கஷ்டபட்டுட்டுதான் இருந்தாங்க. இன்னும் எவ்ளோ நாளுல சாதனை பண்ண போறாங்களோ?

(தொடரும்)

பத்து நாட்களில் கார் ஓட்டுவது எப்படி? - 3


"பாஸ்... நீங்க டெய்லி பைக் ஓட்டுறீங்களா?”

“ஆமாம்.”

“கொஞ்சம் வேகமா ஓட்டுவீங்களோ?”

ஹி...ஹி...

”கார அப்படியெல்லாம் ஒட்டக் கூடாது. பைக்க சந்து பொந்துல எல்லாம் ஓட்டுவீங்க. இத அப்படி ஓட்ட முடியாது. நீங்க அப்படி போறப்ப, கார்க்காரன் ஒங்கள திட்டியிருப்பான். நாளைக்கு நீங்க அந்த மாதிரி ஒரு பைக்காரன திட்டுவீங்க. ரோட்டுல ஒரு கல் கெடந்திச்சின்னா, பைக்குல வளைச்சிக்கிட்டு போவீங்க. இப்ப, ஒரு கல் இருந்தாலும், நீங்கதான் மெதுவா போகணும்.”

முத நாளு காத்துதான் வண்டிக்கு முக்கியம்ன்னு சொன்னாரு இல்ல. அது ஏன்னா, காத்து இல்லனா வண்டி ஓடாதான். ஓடும்போது காத்து போச்சினா, வண்டி தலைகீழா விழ கூட சான்ஸ் இருக்காம்.

அப்புறம் இன்னொண்ணு சொல்ல மறந்திட்டேன். முத நாளே போயி, லெனர் லைசன்ஸ் போட்டுடுங்க. அப்பதான், 30 நாளு கழிச்சி லைசன்ஸ் எடுக்க வசதியா இருக்கும்.

இன்னைக்கு, தலைவரு இரண்டு விஷயம் சொல்லி கொடுத்திட்டு அத பிராக்டிஸ் பண்ண சொன்னாரு.

மேடான பகுதில, வண்டிய ஆப் பண்ணிட்டு எப்படி ஸ்டார்ட் பண்ணனும்ன்னு. சமதளத்தில் ஓட்டும்போது, பிரேக்க பிடிக்க தேவையிருக்காது. ஸோ, கிளட்ச்ச மட்டும் விடுவீங்க. ஆனா, மேட்டு பகுதில, பிரேக்க பிடிச்சிட்டு இருப்பீங்க. அந்த சமயம், கிளட்ச்ச விட்டாலும் வண்டி போகாது. பிரேக்க விட்டா வண்டி பின்னாடி போகிடும். அப்ப என்ன பண்ணுறது?

கொஞ்சம் நேக்கா, கிளட்ச்ச விட்டுட்டு வண்டி லேசா உறுமுற சமயம், பிரேக்குல இருந்து கால எடுத்திட்டு, ஆக்ஸிலேட்டர லேசா மிதிங்க. ஸிங்க் வருற வரை இதுக்கு பிராக்டிஸ் தேவை.

அடுத்தது, வண்டிய எடுத்து பின்னாடி திருப்புறதுக்கு பிராக்டிஸ்.பின்னாடி திரும்பும்போது பின்கண்ணாடி வழியா பார்த்திட்டே திரும்பணும். ரிவர்ஸ் கியர்ல வண்டி கொஞ்சம் ஸ்பீடாவே போகும். அதனாலே கவனம் தேவை.

”நான் எப்ப நானே தனியா வண்டிய ஓட்டலாம்?”

“எட்டு நாளு கழிச்சு ஓட்டலாம். ம்ம்ம்ம்... நாளைல இருந்துகூட ஓட்டலாம்.”

எனக்கென்னமோ அப்படி தோணலை. திரும்பும்போது, கொஞ்சம் குழப்பமாத்தான் இருக்கு.

இன்னைக்கு காருகள பத்தி சொன்னாரு. ஒவ்வொரு கார பத்தியும் சொன்னாரு. மாருதி 800 தான் ரொம்ப சேல்ஸ் ஆன வண்டின்னு சொன்னாரு. சாண்ட்ரோல எலக்ட்ரானிக் சமாச்சாரம் அதிகம்ங்கறதால, ரிப்பேர் பார்க்க கொஞ்சம் கஷ்டம்ன்னாரு.இப்ப வர்ற கார்ல, இன்ஜின் வெயிட் கம்மி. ஆனா, பவர் அதிகம்ன்னாரு. நான் வண்டி ஓட்டுறதுல கவனமா இருந்ததால, அவ்ளோவா அவரு பேச்ச கவனிக்க முடியல. சும்மா உம் கொட்டிட்டு இருந்தேன்.

கார் ஓட்டும்போது யாராவது கூட இருந்தா நல்லதாம். தனியா போறத விட, கூட யாராவது இருக்கும்போது கொஞ்சம் அதிகம் அலெர்ட்டா இருப்போமாம். நைட் ஓட்டும்போது, யாராவது கண்டிப்பா இருக்கணுமாம். நான் கூட எப்பவாவது ஊருக்கு கார்ல போகும்போது, டிரைவர் கூட பேசிட்டே வருவேன். அப்படியே, டிஜே மாதிரி பாட்டு செலக்ட் பண்ணுறதும் நாந்தான்.

நைட் ஓட்டும்போது டயர்டா இருந்திச்சுனா, வேற யார்ட்டயாவது கொடுத்துடுங்க. அப்படி யாராச்சும் இல்லனா, ஒரு பாதுகாப்பான இடத்துல நிறுத்திட்டு, லைட்டா ஒரு தூக்கத்த போட்டுட்டு போங்க.

எல்லா காருலையும் வீல் இணைப்பு ரொம்ப காலத்துக்கு அப்படியே டைட்டா சிக்குன்னு இருக்காதாம். அடிக்கடி சர்வீஸ் அப்ப, அத கவனிக்கணும். இல்லாட்டி, உங்களுக்கு முன்னாடி அது ஒடிட்டு இருக்கும்னாரு. எனக்கு கரகாட்டகாரன் தான் ஞாபகம் வந்தது.

பத்து நாட்களில் கார் ஓட்டுவது எப்படி? - 2


ஆன்/ஆஃப் சொன்னேன், இல்லையா? அது ஒண்ணும் சாதாரணமானது இல்ல. கீயை வலது பக்கம் திருப்பினா, ஆன். இன்ஜின் ஸ்டார்ட் பண்ண, இன்னும் வலதுபக்கம் திருப்பிட்டு விட்டுடணும். கீ பழைய நிலைக்கு வந்துடும். இப்ப ஆஃப் பண்ணுறதுக்கு, இடது பக்கம் திருப்பணும். இன்ஜின் ஸ்டார்ட் பண்ணினத்துக்கு பிறகு, திரும்பவும் வலது பக்கம் திருப்பினா அது வண்டிக்கு நல்லது இல்ல. ஏகப்பட்ட காரணம் சொன்னாரு. சுருக்கமா, ஒடுற டயருக்குள்ள கால விடுற மாதிரின்னாரு. வண்டிக்கு செலவு வைச்சுடும்ன்னாரு. சரிதான்னு கேட்டுக்கிட்டேன்.

இன்னிக்கு சொல்லிக்கொடுக்க போறது, கிளட்ச், கியர், பிரேக் பத்தி. கால்ல மிதிக்க மூணு சமாசாரங்கள் இருக்குது. பர்ஸ்ட், கிளட்ச். செகண்ட், பிரேக். அப்புறம், ஆக்ஸிலேட்டர். இடது காலுக்கு, கிளட்ச்ச கொடுத்துடணும். வலதுகாலுக்கு, ஓட்டும்போது ஆக்ஸிலேட்டர். நிறுத்தும்போது, பிரேக்.

இடதுகைக்கு வேல கொடுக்கபோறது, கியர். கார்ல மொத்தம் அஞ்சு கியர்ஸ். ஒண்ணு ரிவர்ஸ் கியர். கீழே கொடுத்திருக்குற படத்த பாருங்க. இதுல, 1-2, 3-4, R இதையெல்லாம் இணைக்குற கோடு பூரா நியூட்ரல்தான். ஏதாவது கியர்ல இருந்து எடுத்து விட்டா, அதுவா மூணுக்கும் நாலுக்கும் இடையே இருக்கும் இடத்துக்கு வந்துடும்.



சரி. வண்டிய ஸ்டார்ட் பண்ணிட்டு நாமலே எப்படி போறது?

1) முன்னாடியே சொன்ன மாதிரி ஆன் பண்ணுங்க. இன்ஜின் ஸ்டார்ட் பண்ணுங்க.
2) கவுண்டமணி செந்தில பண்ணுவாரே, அந்த மாதிரி மிதிக்காம, மெதுவா கிளட்ச்ச மிதிங்க. விட்டுடாதீங்க.
3) பர்ஸ்ட் கியருக்கு இடது கைல இருக்குற குச்சியை தள்ளுங்க.
4) கிளட்ச்ச ,மெதுவா விடுங்க.
5) ஆக்ஸிலேட்டர விடவே தேவையில்லை. கிளட்ச்ச விட்டாவே வண்டி மூவ் ஆகும்.

ஆக்ஸிலேட்டர் கொடுக்காம கிளட்ச்ச விட்டே, என்ன நடக்குதுன்னு பார்க்க சொன்னாரு. வண்டி மூவ் ஆச்சு. பைக்ல இப்படி இருக்காது. ஆனா, பெரிய வண்டி எல்லாத்திலையும் இப்படித்தான்னு சொன்னாரு. அப்புறம், ஆக்ஸிலேட்டர் மிதிக்கவும் வண்டி கொஞ்சம் வேகம் எடுத்தது.

கொஞ்சம் தூரம் போனதும், ஆக்ஸிலேட்டார்ல இருந்து கால்ல எடுத்திட்டு, கிளட்ச்ச மிதிச்சு ரெண்டாவது கியர் போடணும். முதல் கியர்ல இருந்து ரெண்டாவது கியருக்கு அப்படியே போய்டலாம்.

போடும்போது, நடு கோட்ட தொட்டு போறதால, நியூட்ரலுக்கு போயிட்டுதான் போகுதாம்.

அப்புறம் இப்ப வர்ற சில கார்ல கிளட்ச் கிடையாதாமே? அப்படியா? தவிர, கியர் வடிவமைப்பும் நேரா இருக்குமாம். உதாரணத்துக்கு, ஹூண்டாய் ஐ10? தெரிஞ்சவுங்க சொல்லுங்க.

”எவ்ளோ தூரம் இப்படி ரெண்டாவது கியர்ல போகணும்?”

“சீக்கிரம் மூணாவது, நாலாவதுக்கு போனா நல்லதுதான். பெட்ரோலும் ரொம்ப குடிக்காது. வண்டிக்கும் நல்லதுதான்.”

“போகட்டுமா?”

“வேண்டாம். வேண்டாம். இப்பதானே கத்துக்கிறீங்க. அப்படியே மெதுவா ஓட்டுங்க. வேகமா போனா எதுவும் கத்துக்க முடியாது. மெதுவா போகும்போதுதான் நுணுக்கங்களை துல்லியமா கவனிக்கலாம். கத்துக்கலாம்”

ஒகே. பாஸ்.

பிறகு, நாலைஞ்சு இடத்துல வண்டிய நிறுத்தி ஆப் பண்ணி, திரும்ப கிளப்புறதுக்கு பிராக்டீஸ் கொடுத்தாரு. அப்படியே, போயிட்டு இருக்கப்போ, அவரு சொல்லாமலே கொஞ்சம் வேகம் கொடுத்தேன். வேண்டாம், வேண்டாம்ன்னு சொல்லி வேகத்தை குறைக்க சொன்னாரு. நானும் குறைச்சேன். ஸ்கூல்க்கு போற ரெண்டு பிள்ளைங்க சைக்கிளில என்னை முந்திக்கிட்டு போனாங்க.

பத்து நாட்களில் கார் ஓட்டுவது எப்படி? - 1


பதிவு படிச்சு கார் ஓட்டுறதான்னு நினைக்காதீங்க. நீச்சல் கத்துக்கறதுக்கே புக் இருக்கு. அது மட்டும் இல்ல. இப்ப நம்மாளுங்க எதுக்கெடுத்தாலும் கூகிளத்தான் கேட்கிறாங்க. அப்படி, பின்னாடி வருற சந்ததியினருக்கு உபயோகமா இருக்குமேன்னுதான். ஓட்டுறீங்களோ இல்லையோ, நான் ஓட்டுன கதைய கேளுங்க.


கத்துக்கொடுக்குற கார்ல ரெண்டு கிளட்ச், ரெண்டு பிரேக் இருக்குது. ஒண்ணு நமக்கு.இன்னொண்ணு மாஸ்டருக்கு. முத நாள், அதையெல்லாம் நான் பாத்துக்கிறேன். நீங்க தொட வேண்டாம்ன்னு சொல்லிட்டாரு. ஸோ, ஆக்ஸிலேட்டரை மட்டும் மிதிச்சிக்கிட்டு, ஸ்ட்யரிங்க மட்டும் பிடிச்சிக்கிட்டு ஓட்டுனேன். அம்யூஸ்மெண்ட் பார்க்குல ஓட்டுற கார் மாதிரி இருந்திச்சு.


ஒரு இடத்துல வண்டிய நிறுத்த சொல்லிட்டு, கேள்வி கேட்க போறேன்னு சொன்னாரு. ஆஹா! இது வேறயான்னு நினைச்சிக்கிட்டு கேளுங்கன்னு சொன்னேன். சிக்னல் காட்ட சொன்னாரு. காட்டுனேன். அப்புறம் ஒரு சிம்பிளான கேள்வி கேட்டாரு. நாந்தான்ன்ன்...


“இந்த கார் எதுல ஓடுது?”


“ரோட்டுல”


“இல்ல... எதுல ஓடுது?”


யோசித்துவிட்டு, “இன்ஜின்... டார்க்...”


“ம்ஹும். நான் சொல்லுறது புரியுதா?”


“ம்ம்ம்... புரியுது”


“எனக்கு தமிழ் கொஞ்சம் சுமாராத்தான் வரும்”


“இல்ல.. நல்லாத்தான் பேசுறீங்க... நீங்க பேசுறது ரஜினி மாதிரி இருக்கு”ன்னு ஒரு பிட்ட போட்டேன்.


நான் அவரு பேசுனது புரியல்லன்னு சொன்னத புரியுதுன்னு சொன்னதா தப்பா புரிஞ்சிக்கிட்டாரு.


மனுசன் சந்தோஷமாயிட்டாரு. “நானும் கிருஷ்ணகிரி பக்கம்தான். சரி, கார் எப்படி போகுது?”


“ஆக்ஸிலேட்டர மிதிச்...”


“இல்ல”


நான் முழிக்குற முழிய பார்த்திட்டு, “காத்து”ன்னாரு.


“ஆஅன்” - இது நான்.


“டயருல இருக்குற காத்து”


இவரு வேற... காலங்காத்தால் கடுப்புகள கிளப்பிக்கிட்டுன்னு நினைச்சிக்கிட்டு, “ஓகே”ன்னேன்.


”நீங்க ஒரு ஊருக்கு போயிட்டு இருக்கீங்க... அப்ப ஒரு பாலத்துக்கு கீழே போக வேண்டி இருக்கு... பாலத்துக்கு கீழே போனீங்கன்னா, மேலே தட்டும். எப்படி போவீங்க?”


???


“கண்டிப்பா போகலாம். எப்படி போவீங்க?. போயிட்டு திரும்ப ஊருக்கு போகணும்.”


”காத்த கொஞ்சம் இறக்கி விட்டுட்டு போவேன்.”


“கரெக்ட்”


“காத்த இறக்குனா திரும்பி எப்படி ஊருக்கு போறது?” என் சந்தேகத்த கேட்டேன்.


“அதெல்லாம் போயிடலாம்”


!!!


அப்புறம் சில கேள்விகள கேட்டேன். அதுக்கு நிறைய டிப்ஸ் கொடுத்தாரு.


1) டிரைவர் சீட்ல உட்கார்ந்து ரோட்டு ஓரத்த, வைப்பர் கண்ணாடிய டச் பண்ணுற பாயிண்டோட ஓப்பிட்டு, வலது டயர் போற இடத்த கணிச்சிக்கலாம்.
2) ஸ்பிட் பிரேக்கர்ல ஆக்ஸிலேட்டர விட்டுடுங்க.
3) டர்னிங் திரும்பினத்துக்கு பிறகு, திருப்பின ஸ்ட்யரிங்க முழுமையா திருப்பிடுங்க.
4) ஏதும் பிரச்சினை ஆச்சுனா, ஃபர்ஸ்ட் ஹாஸ்பிடல் போன் பண்ணனும். அப்புறம், போலீஸ்.


கியர், கிளட்ச், பிரேக் எல்லா கண்ட்ரோலும் அவர் கை, கால்ல இருந்ததால, எனக்கு பெருசா ஏதும் வேல இல்ல. சும்மா பேசிட்டு ஓட்டிட்டு (கார) இருந்தேன்.


”நீங்க ஃபுல் டைம் கார் டிரைவிங் ட்ரேயினிங்தானா?”


“ஆமாம் சார். முன்னாடி கார் டிரைவராகவும் வேல பார்த்தேன். இப்ப, இது மட்டும்தான்”


“ஏன்?”


“ஆக்ஸிடெண்ட், ரத்தம்... தொடர்ந்து இதையே பார்த்து பார்த்து சலிச்சு, பயந்து டிரேயினிங் மட்டும் கொடுக்கலாம்ன்னு வந்துட்டேன்”


”அதுக்கு என்னங்க பண்ணுறது?”


”ஒண்ணும் பண்ண முடியாது, சார். இப்ப முன்னாடி போறாரே... அவரு சட்டுன்னு கீ்ழே விழுந்துட்டாருன்னா... இப்ப நம்மளாள கண்ட்ரோல் பண்ணி நிறுத்த முடியுமா?”


நான் எங்கே கண்ட்ரோல் பண்ணுறது? என் கையில ஸ்ட்யரிங். கால்ல ஆக்ஸிலேட்டர். அவ்ளோதான்.


“நாமெல்லாம் கொசு மாதிரி சார்... ஒண்ணும் பண்ண முடியாது”


“ம்ம்ம்...”


”முதல்ல உங்கள காப்பாத்திக்கோங்க... அப்பத்தான் மத்தவங்கள பாத்துக்க முடியும்”


அசால்ட்டா தத்துவம் சொல்லுறாரே.


“பைக்குல போயி யாரையாச்சும் இடிச்சிங்கன்னா, அதிகபட்சம் அடிதான் படும். உயிருக்கு ஆபத்து இல்ல. காரு அப்படி இல்ல. அதே மாதிரி, கார்ல போயி ஏதும் தப்பு நடத்துச்சுன்னா, தப்பு உங்க மேலே இல்லனாலும் உங்களுக்கு தான் அடி படும். ஏன்னா, சைக்கிள்-பைக் இடுச்சிக்கிட்டுன்னா சைக்கிள்காரன் நல்லவன். பைக்-கார் இடுச்சிக்கிட்டுன்னா பைக்காரன் நல்லவன். இதுதான் நம்ம ஊரு நியாயம்.”


அப்படியே, சமூக கருத்தும் சொல்லுறாரே.


“அதுவும் இந்த ஊருக்காரங்க இருக்காங்களே. மோசமானவங்க.” கடந்த சென்ற கிராமத்தை பற்றி சொன்னார்.


முதல் நாள் கத்துக்கொண்டவை.


1) ஆக்ஸிலேட்டர் எப்படி, எங்க மிதிக்கணும்.
2) ஸ்ட்யரிங் எங்க, எப்படி திருப்பணும்.
3) ஹாரன் அடிக்குறது.
4) இண்டிக்கேட்டர் போடுறது.
5) வைப்பர் எப்படி யூஸ் பண்ணுறது.


அப்புறம் முக்கியமானது ஒண்ணு,


ஆன்/ஆஃப்