Monday, March 7, 2011

ATM – ஏ டிஎம் தெரிந்ததும் தெரியாததும்!

ATM (Automatic Teller Machine)
ஏ.டி.எம் எப்படிச் செயல்படுகிறது என்பதைப் பற்றிய தகவல்கள் எல்லாம் மிகவும் சுவாரஸ்யமானது.

கட்டுக்கட்டாக பணத்தை பாக்கெட்டில் வைத்துக் கொண்டு இப்போதெல்லாம் பஸ்சில் பதட்டப்பட்டுக்கொண்டே யாரும் பயணிப்பதில்லை. காரணம் ஏடி. எம் அட்டைகள்.
வங்கியில் கணக்கை ஆரம்பித்த அனைவருக்குமே ஒரு அட்டை கிடைக்க தற்போது எல்லா வங்கிகளும் வசதி செய்துள்ளன. எப்போது தேவையோ அப்போது எடுத்துக் கொள்ளலாம் எனும் நிலையும், எல்லா தெருக்களுக்குள்ளும் நுழைந்துவிட்ட தானியங்கி இயந்திரங்களும் பணத்தை தூக்கிச் சுமக்கும் பணியை குறைத்திருக்கின்றன.
நாம் பணம் தேவைப்படும் போது ஏ.டி. எம் முன்னால் சென்று நிற்கிறோம், நமது அட்டையை உள்ளே நுழைக்கிறோம். சங்கேத எண்ணை அமுக்குகிறோம். நம்முடைய கட்டளைக்கு ஏற்ப பணம் கிடைக்கிறது. திருப்திப்பட்டு விடுகிறோம்.
Automatic Teller Machine என்பதன் சுருக்கம் தான் ATM. நம்முடைய அட்டையில் 16 எண்கள் கொண்ட ஒரு எண் இருக்கும். இது நம்மைப் பொறுத்தவரையில் ஒரு சாதாரண எண். ஆனால் இதன் ஒவ்வொரு எண்ணிற்கும் தனித்தனி அர்த்தங்கள் உண்டு.
முதல் ஆறு எண்கள் அட்டை எந்த வங்கியிடமிருந்து பெறப்பட்டிருக்கிறது என்பதைக் குறிக்கும். அதற்கடுத்த ஒன்பது எண்களும் சேவை வழங்கு நிறுவனங்களின் விருப்பத்தைப் பொறுத்த எல்லைக்குள் இருக்கும். கடைசி எண் ஒரு ரகசிய எண். அதுதான் உங்கள் அட்டை பயன்படுத்தக் கூடியதா இல்லையா என்பதைச் சொல்லும்.
மாஸ்டர்கார்ட் எண்கள் ஐந்து எனும் எண்ணில் ஆரம்பிக்கும், விசா எண்கள் நான்கு எனும் எண்ணில் ஆரம்பிக்கும் என்பது ஒரு சிறு சுவாரஸ்யத் தகவல்.
அட்டைகளை இரண்டு பெரும் பிரிவாகப் பிரிக்கலாம். ஒன்று கிரடிட் கார்ட் எனப்படும் கடனட்டைகள். இன்னொன்று டெபிட் கார்ட் அல்லது செக் கார்ட். கடனட்டையில் நாம் செலவழிக்கும் பணத்தை மாதம் ஒருமுறை செலுத்தினால் போதும். செக் கார்ட் மூலம் செலவழிக்கும் பணம் நம்முடைய வங்கிக் கணக்கிலிருந்து உடனே கழிக்கப்பட்டு விடும்.
ஏடிஎம் முன்னால் சென்று அட்டையை உள்ளே செலுத்தி நம்முடைய சங்கேத எண்ணைக் குறிப்பிட்டபின் நமக்கு எவ்வளவு பணம் தேவை என்பதைக் குறிப்பிட்டு பொத்தானை அமுக்குகிறோம். நம்முடைய அட்டையின் பின்னால் இருக்கும் மேக்னட்டிக் ஸ்ட்ரைப் நம்முடைய அட்டையின் எண்ணை மென் குறியீடாக்கி உள்ளே அனுப்பும். அதற்குப் பயன்படும் இடம் தான் கார்ட் ரீடர் எனப்படும் நாம் அட்டையை உள்ளே நுழைக்கும் இடம். அப்போது கட்டளை ஏடிஎம் முனையிலிருந்து சுவிட்ச் என அழைக்கப்படும் கணினி மென்பொருளுக்குள் நுழைகிறது. இங்கே இரண்டு விதமான சோதனை வளையங்கள் இருக்கின்றன. முதலில் நாம் பயன்படுத்தும் அட்டை சரியானது தானா ? அதற்கு நாம் கொடுத்த சங்கேத எண் சரியானது தானா என்பதைச் சரிபார்க்கும் சோதனை.
இந்தச் சோதனை தோல்வியடைந்தால் நாம் ஏதோ தவறு செய்திருக்கிறோம் என்று பொருள். ஒருவேளை சங்கேத எண்ணைத் தவறாகச் சொல்லியிருக்கலாம்.
இரண்டாவது சோதனை நம்முடைய வங்கிக்கணக்கில் நாம் கேட்கும் பணம் இருக்கிறதா ? நான் பணம் எடுப்பதில் இன்றைய தினத்தின் உச்ச வரம்பை எட்டியிருக்கிறோமா ? என்பது குறித்த சோதனைகள். முதல் சோதனை முடிந்தபின், இரண்டாவது சோதனைக்குள் நுழைந்து இரண்டும் சரியாய் இருந்தால் பணம் கொடுக்கலாம் எனும் பதில் தானியங்கி முனைக்கு வரும். இந்த இரண்டு சோதனைகளையும் கடக்க பல இலட்சம் தகவல்கள் அடங்கியிருக்கும் மென் கோப்புகளில் தேடுதல் நடக்கும்.
இந்த தேடுதல் முடிந்து தானியங்கி முனைக்கு வரும் தாமதம் சில வினாடிகளே. இந்த வினாடிகள் அதிகரிக்கும் போது தான் நாம் சலித்துக் கொள்கிறோம்.
பணத்தை எண்ணித் தரும் பணம் பட்டுவாடா இயந்திரமும் நுட்பமான சென்சார்களால் ஆனது. இது தவறு இழைப்பதில்லை. இரண்டு நோட்டுகள் ஒட்டி வரும் எனும் ஆசை நப்பாசையாய் போய்விடும் என்பது திண்ணம்.
இன்னொரு சுவாரஸ்யமான விஷயமும் அடங்கியிருக்கிறது. நாம் நம்மிடம் ஒரு வங்கியின் அட்டை இருந்தாலும் வேறு வங்கியின் தானியங்கி நிலையமும் நமக்குக் பணம் கொடுக்கும். எப்படி ?
இதை செட்டில்மண்ட் என்பார்கள். அதாவது வங்கிகள் எந்தெந்த வங்கி அட்டைகளுக்குப் பணம் கொடுக்கிறதோ அந்தந்த வங்கிகளின் கணக்கில் அந்தப் பணத்தைச் சேர்த்துக் கொள்ளும். அன்றைய தினத்தின் இறுதியில் வங்கிகள் மற்ற வங்கிகளுக்கு எவ்வளவு கொடுக்க வேண்டும் என்பதை கணக்கிட்டு உடன்பாடு செய்து கொள்கின்றன.
மின் பண பரிமாற்றம் எனப்படும் இந்த தொழில்நுட்பம் மிகவும் சிக்கலானதும், பணம் ஈட்டக் கூடியதுமாகும். பல முன்னணி மென்பொருள் நிறுவனங்கள் இதை நடத்துகின்றன.
சரி, மென்பொருள் நிறுவனங்களுக்கு இதனால் எப்படி காசு கிடைக்கிறது ? இந்த தானியங்கி நிலையத்திலிருந்து செல்லும் கட்டளைகள் மென்பொருளோடு இணையாவிடில் ஒன்றுக்கும் உதவாது. இதன் பின்னால் இருக்கும் மென்பொருள் தான் வரும் தகவல்களைச் சரிபார்த்தல், பணம் பட்டுவாடா செய்ய உத்தரவிடுதல், மீதம் கணக்கிடுதல் என ஒட்டுமொத்தப் பணியையும் செய்கிறது. அனைத்து விவரங்களையும் மென் கோப்புகளில் சேமித்தும் வைக்கிறது. இந்த சுவிட்ச் எனப்படும் இந்த மென்பொருளுக்குள் வரும் தகவல்கள், அல்லது விண்ணப்பங்களுக்கு ஏற்ப மென்பொருள் நிறுவனம் வங்கிகளிடம் பணம் பெற்றுக் கொள்கின்றன.
அதாவது நீங்கள் பத்து முறை பணம் எடுக்கிறீர்கள் என்றால் மென்பொருளுக்குக் கிடைப்பது பத்து தகவல்கள். ஒவ்வொரு தகவலுக்கு ஒரு குறிப்பிட்ட தொகை மென்பொருள் நிறுவனத்துக்குச் செல்லும். தினமும் பல ஆயிரக்கணக்கான தானியங்கிகளில் நிகழும் இந்த பரிவர்த்தனை மூலம் பல கோடிக்கணக்கான பணம் மென்பொருள் நிறுவனங்களுக்குப் போய் சேர்கிறது. இதற்காகத் தான் ஆயிரக்கணக்கான மென்பொறியாளர்கள் பணியாற்றுகின்றனர். அதிலும் ஒவ்வொரு வங்கிக்கும் உரிய பிரத்தேக சட்டங்களின் அடிப்படையில் மென்பொருள் இயங்குவது தான் முக்கியம். குறிப்பாக சில வங்கிகள் ஒரு நாள் பத்தாயிரம் ரூபாய் மட்டுமே
ஏடிஎம் வழியாக எடுக்க அனுமதிக்கும். சில வங்கிகள் ஐம்பதாயிரம் ரூபாய் வரை அனுமதிக்கும். இதற்குத் தக்க படி மென்பொருள் தயாராக்கப் பட வேண்டும்.
அமெரிக்காவில் இருபத்து ஐந்திற்கும் முப்பத்து நான்கிற்கும் இடைப்பட்ட வயதுடையவர்களில் அறுபது சதவீதம் பேர் மாதம் எட்டு முறை ஏடிம் இயந்திரத்தைப் பணம் எடுக்க நாடுகிறார்களாம். பெரும்பாலான ஏடிஎம் நிலையங்களில் வெள்ளிக்கிழமைகளில் தான் அதிக பரிவர்த்தனை நடக்கிறதாம்.
ஏடிஎம் அட்டையைப் பயன்படுத்துபவர்கள் மற்றவர்களை விட இருபது முதல் இருபத்து ஐந்து சதவீதம் வரை அதிகமாகச் செலவழிக்கிறார்களாம்.
ஏடிஎம் அட்டைக்கு மிக முக்கியமானது பின் எனப்படும் சங்கேத எண். இது தானியங்கியில் அளிக்கப்பட்டவுடன் குறியீடுகளாக மாறிவிடும். அதன் பின் யாரும் அதை திருட முடியாது.
ஆனால் அது நம்மிடம் இருக்கும் வரை அதை நாம் தான் பாதுகாக்க வேண்டும். இல்லையேல் இழப்பு நமக்கு தான். அட்டையும் எண்ணும் கிடைத்துவிட்டால் யார் வேண்டுமானால் நம் வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுக்க முடியும். இணையத்திலும் பொருட்கள் வாங்க முடியும்.
சங்கேத எண்ணை பத்திரமாய் வைத்திருக்க சில விஷயங்களைக் கவனத்தில் கொண்டால் போதும்.
சங்கேத எண்ணை எழுதி வைக்கக் கூடாது.
மறந்து விடுவோம் எழுதியே ஆகவேண்டும் என விரும்பினால் அதை வீட்டில் எங்காவது பத்திரமாய் எழுதி வைக்க வேண்டும்.
பர்சிலோ, ஏடிஎம் அட்டை இருக்கும் இடங்களிலோ வைக்கவே கூடாது.
சங்கேத எண் உங்களோடு தொடர்பற்றவையாக ஆனால் உங்களால் மறக்க முடியாததாக இருக்க வேண்டும்.
குறிப்பாக உங்கள் பிறந்த நாள், தொலைபேசி எண் போன்றவை இல்லாமல் இருத்தல் நலம்.
சங்கேத எண்ணை எழுதி வைக்கும்போது கூட அதை உங்களுக்கு மட்டுமே புரியும் சங்கேத மொழியிலேயே எழுதி வைக்கலாம்.
சங்கேத எண்ணை பயன்படுத்தும் போது தானியங்கிக்கு மிகவும் அருகாக குனிந்து மற்றவர்கள் பார்க்காத படி எண்களை பயன்படுத்த வேண்டும். குனிந்தபடி எண்ணை பயன்படுத்துவது ரகசியக் காமராக்களிடமிருந்து பெரும்பாலும் தப்ப வைக்கும்.
பணம் எடுத்ததும் உடனே பாக்கெட்டில் பாதுகாப்பாக வைத்துவிட்டு சென்று விடுங்கள். வீட்டில் சென்று எண்ணிப்பாருங்கள். எப்படியானாலும் தவறு நிகழ்ந்தால் அதை சம்பந்தப்பட்ட வங்கிக்குத் தான் தெரியப்படுத்த வேண்டும் எனவே தானியங்கி முன்னால் நின்று எண்ணிக்கொண்டிருப்பது தேவையற்றது.
யாராவது உங்களைத் தாக்கக் கூடும் எனும் பயம் தோன்றினால் ”கேன்சல்” பட்டனை அமுக்கி விட்டு பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று கிளம்புங்கள்.
இரவு நேரங்களில் ஏடிஎம் பயன்படுத்த வேண்டியிருந்தால் ஆள்நடமாட்டம் அதிகமாக இருக்கும் இடங்களிலுள்ள ஏடிஎம் களைப் பயன்படுத்துங்கள்.
முக்கியமாக அட்டையின் பின்னால் இருக்கும் தொலைபேசி எண்ணை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். அட்டை தொலைந்ததை அறிந்தால் உடனே அந்த எண்ணுக்குத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவியுங்கள். உடனே உங்கள் அட்டையின் எண் ”ஏமாற்று” வரிசையில் சேர்க்கப்படும். அதன்பின் அந்த அட்டையை யாராவது பயன்படுத்தினாலும் அது ”ஏமாற்று வேலை” என்னும் முத்திரை இருப்பதால் நிராகரிக்கப்படும்.

பத்து நாட்களில் கார் ஓட்டுவது எப்படி? - 10


”சார். இன்னைக்கு கடைசி நாள். என்ன பண்ணலாம்?”


சந்தானம் ஸ்டைலில் மட்டன் பிரியாணி பண்ணலாமான்னு கேட்க நினைத்து, அப்புறம்,


“நீயே சொல்லு”ன்னுட்டேன்.


“கடைசி ஆசை. நீங்க சொல்லுங்க”


இதென்ன, தூக்கு தண்டனையா?


“சரி. டிராபிக்ல போயி ஓட்டுவோம். அப்புறம் மெயின் ரோட்டுலயே ரிவர்ஸ் எடுப்போம். ஒ.கேவா?”


ஒ.கே. ரைட்.


அப்படியே ஒரு பெரிய ரோட்டுல போயி செய்தோம்.


முடிக்கறதுக்கு முன்னாடி சில முக்கியமான விஷயங்கள்.


1) எப்பவும் காரை எடுக்கறதுக்கு முன்னாடி எல்லா லைட், இண்டிகேட்டரையும் போட்டு பார்த்திடுங்க. காரை சுத்தி ஒரு ரவுண்ட் போயிட்டு பெட்ரோல் லீக் ஆகுதா, டயருல காத்து இருக்கான்னு பார்த்திடுங்க.
2) ஏறுனவுடன் கண்ணாடியை சரி பண்ணிடுங்க. மறக்காம, சீட் பெல்ட் போடுங்க.
3) போகும்போது 10 நொடிக்கு ஒருமுறை எல்லா கண்ணாடியையும் பாருங்க. அதே மாதிரி, ஸ்டாப் பண்ணிட்டு கிளம்பும்போதும் எல்லா கண்ணாடியும் பாருங்க.
4) முன்னாடி நிக்குற வண்டி கிளம்புனதுக்கு அஞ்சு செகண்ட் கழிச்சு கிளம்புங்க.
5) தொலைதூர பயணத்தின் போது, நாலு மணி நேரத்திற்கு ஒருமுறை ஓய்வு எடுப்பது அவசியம்.
6) திரும்பும்போது, ஒரு முப்பது மீட்டருக்கு முன்னாடியே இண்டிகேட்டரை போட்டுடுங்க. இடது பக்கம் திரும்பறதோட, வலது பக்கம் திரும்பும் போது ரொம்ப கவனமா இருக்கணும். ரோட்டுக்கு நடுவே இருக்குற கோட்ட தாண்டுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
7) முடிஞ்சளவு சீக்கிரம் கிளம்புங்க. அதன் மூலம் மிதமிஞ்சிய வேகத்தை தவிர்க்கலாம். கட்டுபாடற்ற வேகத்தை தவிர்த்தாலே, எல்லோருக்கும் நல்லதுதான்.
8) எந்த அளவு வேகமா போறோமோ, அதுக்கு ஏத்தமாதிரி பிரேக் பிடிக்க வேண்டிய தூரம் மாறுபடும். அது கவனத்துல இருக்கணும்.
9) எப்பவும் ரோட்டுல போற மத்தவங்க, எந்நேரமும் எந்த தப்பும் செய்வாங்கங்கற நினைப்பு இருந்திச்சுன்னா, நாமா கொஞ்சம் சேஃபா இருக்கலாம்.
10) கார் ஓட்டும்போது தயவுசெய்து போன் பேசாதீங்க.




கார் டிரைவிங் டிரெயினிங் ஒவர். இன்னும் இருபது நாள் கழிச்சு போயி லைசன்ஸ் எடுத்திடலாம்.


“ஏதும் ஹெல்ப் வேணும்னா கால் பண்ணு. எனக்கு ஏதும் வேணும்ன்னாலும் நான் கால் பண்றேன். பார்க்கலாம், பை.”.


-------------


கார்கள் உடனான மனிதனின் மனநிலையை பார்ப்போம். படிக்காதவன் படத்தில் ரஜினி காருடன் ”ல‌க்ஷ்மி, ல‌க்ஷ்மி”ன்னு பேசுவார். நிஜமாவே அந்த மாதிரி பேசுறவங்க இருக்காங்க.


காருக்கு ஏதேனும் ஒண்ணுனா துடிதுடிச்சு போயிடுவாங்க. அப்படி இருக்கறது சரியா?


கண்டிப்பா இல்லை. சிவாஜி போன்ற முன்னணி நடிகர்கள் அந்த காலத்தில் அந்தஸ்த்தின் அடையாளமாக இம்பாலா கார் வைத்திருந்த போது, எம்.ஆர். ராதா அதில் வைக்கோல் ஏற்றி “கார் ஈஸ் ஜஸ்ட் எ கார்”ன்னு காட்டிட்டு இருந்தார்.


அது மாதிரி எல்லோராலையும் இருக்க முடியாதுங்கறதுதான் உண்மை. பல கார்கள் வாங்குற நிலையில இருக்கறவுங்க அப்படி பண்ணலாம். வாழ்நாள் கனவா ஒரு கார் வாங்குறவன்? ஒரு கோடு கூட விழாம பாத்துக்கத் தான் ஆசைப்படுவான். எல்லாம் ஒரு அளவோட இருந்தா நல்லதுதான். அவ்ளோ தீவிரமா இருக்குறவுங்க, சக மனுசன் மேலயும் அதே அளவு அன்போட இருந்தா எந்த பிரச்சினையும் இல்ல.


--------------


இந்த பதிவில் கார் ஓட்டுவதற்கான எல்லா பயிற்சியை பற்றியும் சொல்லியிருப்பேன் என்று கிடையாது. நான் கார் ஓட்டிய அனுபவமே இது. விட்டு போனவற்றை நண்பர்கள் சொன்னால், தெரிந்து கொள்ள நல்லா இருக்கும்.


பின்னூட்டங்களில் பல நல்ல தகவல்களை அளித்த DHANS மற்றும் அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.


(முற்றும்)

பத்து நாட்களில் கார் ஓட்டுவது எப்படி? - 9


இன்னைக்கி அவன் நேத்து சொன்ன மாதிரி மெயின் ரோட்டுக்கே போயிடலாம்ன்னு மெயின் ரோட்டுல இறங்கிட்டோம். காலையிலே அவ்வளவா டிராபிக் இல்லை. திரும்ப வரும்போது வந்திடும்.

அவன் கடை இருக்குற தெருவுல உள்ள பண முதலைகள பத்தி சொன்னான். பார்க்கத்தான் தெரு சாதாரணமா இருக்கு. ஏகப்பட்ட கோடிஸ்வரர்கள் இருக்காங்களாம். பணத்த என்ன பண்றதுன்னு தெரியாம்ம சினிமாவுல எல்லாம் போட்டு தொலைக்குறவுங்க பலர் இருக்காங்களாம். நான் கூட பயந்து போற மாதிரியான முகத்தோட சில சினிமா பேனர்கள் பாத்திருக்கேன்.

அந்த மாதிரியான ஒரு குடும்பத்தோட கதையை சொன்னான். பழைய தமிழ் சினிமா மாதிரி இருந்திச்சி. ஒரு ஊர்ல ஒரு கோடிஸ்வரராம் (அந்த முட்டு சந்துலதான்). அவருக்கு ஒரு கேடி பையன்னாம். எப்பவும் போதையிலயே சுத்துவானாம். அந்த பக்கம் இருக்குற, ஒரு சாப்ட்வேர் கம்பெனி முன்னாடி நின்னு வர போற பொண்ணுகள எல்லாம் பார்ப்பானான். பிடிச்ச பொண்ண தள்ளிட்டு போயிடுவானாம். ஒரு பெரிய வீட்டு பொண்ண கல்யாணம் பண்ணி வச்சாங்களாம். அப்புறம் அதையும் ஏதோ பிரச்சினையில கொன்னுட்டாங்களாம். அந்த பையனும் எய்ட்ஸ் வந்து செத்துட்டானாம்.

சே. இவன் உண்மையை சொல்றானா? இல்ல, கதையை அடிச்சி விடுறானா? என் முகத்தை பார்த்தா என்னன்னு தெரியுது?

இவனுக்கு ரியல் எஸ்டேட் ஆளுங்க கூட சகவாசம் இருக்குறதால, பண பரிமாற்றம் நடக்குற இடங்களுக்கு எல்லாம் போயிருக்கானாம். மூட்டையில லட்சக்கணக்கான பணத்தோட, ரவுடிகளோட காருல போன கதையை சொன்னான். கதை நல்லா இருந்திச்சு!

மெயின் ரோட்டுல ஒரு இடத்துல யூ டர்ன் அடிச்சேன். அடிக்கும்போது வண்டி ஆப் ஆகிடுச்சி. கூட்டம் இல்லாததால அவசரமோ, பதட்டமோ இல்லை. ஆன் பண்ணி திருப்பிட்டு வந்துட்டேன்.

வரும்போது, நிறைய பஸ், கார்களெல்லாம் போயிட்டு இருந்துச்சி. அதுக்கு இடையில போனது கொஞ்சம் திரில்லாத்தான் இருந்துச்சி.

டிராபிக்ல போகும் போது, ஸ்டியரிங்க கொஞ்சம் திருப்புறதுக்கும் கவனம் தேவை. எந்த பக்கம் இருந்தும் எது வேண்டுமானாலும் வரலாம்.

வண்டி எங்கயாவது பிரேக் டவுன் ஆச்சுனா, ரோட்டின் இடதோரத்தில் முதல்ல நிறுத்துங்க. உங்களுக்கு கார பத்தி தெரிஞ்சுதுனா, சரி பண்ண முயற்சி பண்ணுங்க. தெரியாம, கார்ல கைய வச்சிங்கன்னா, உங்களுக்கும் பிரச்சினை. காருக்கும் பிரச்சினை. முடிஞ்சவரை சின்ன சின்ன விஷயங்களை தெரிஞ்சுக்கோங்க. இல்லாட்டி, கார் கம்பெனியோட சர்வீஸ் சென்டருக்கு போன் பண்ணி விஷயத்தை சொல்லுங்க. எல்லா கார் கம்பெனியும் இருபத்தி நாலு மணி நேர சேவை தராங்க. மாருதி, டாடா, ஹூண்டாய்ன்னா, சர்வீஸ் சென்டர்கள் இந்தியா முழுவதும் அதிகமா இருக்கு. இது தவிர, இன்னும் சில தனியார் சேவை மையங்கள் இருக்கின்றன. ஆண்டு சந்தா கட்டினோமானால், இடத்துக்கே வந்து சரி செய்து விட்டு செல்வார்கள். சிட்டி என்றால் வசதி அதிகம்.

“கார்ல திடீர்ன்னு பிரேக் பிடிக்காம போயிடுச்சின்னா என்ன பண்றது?”

“முதல்ல பயப்படாதீங்க. ஆக்ஸிலேட்டர்ல இருந்து கால எடுங்க. கியரை கொஞ்சம் கொஞ்சமா குறைங்க. ஸ்பிட் குறைஞ்சோன, ஹேண்ட் பிரேக் போட்டு வண்டிய ஓரம் கட்டுங்க”

அப்ப பழைய ரஜினி படங்களில் (துடிக்கும் கரங்கள்ன்னு நினைக்கிறேன்) காட்டுற மாதிரி ரோட்டோரத்தில் இருக்குற கல்லுல மோதி நிறுத்த வேண்டாமா?!!!

”டயர் வெடிச்சுதுன்னா, ஸ்டியரிங்க கண்ட்ரோல் பண்றது ரொம்ப கஷ்டம். ரொம்ப சிக்கலான நிலைமை அது. வண்டி கன்னாபின்னான்னு போகும். ஸ்டியரிங்க டைட்ட பிடிச்சிக்கிட்டு, வண்டி நிறுத்துற வழியை பாருங்க.”

இதுக்கெல்லாம் பிராக்டிஸ் தர மாட்டாங்களோ?

இன்னைக்கு கார் ஓட்டிட்டு முடிச்சிட்டு போகும்போது அவன், “சார், நாளைக்கு கடைசி நாள்”ன்னான்.

“ம். எப்படிப்பா ஓட்டுறேன்?”

“ம்ம்ம்.... நல்லா ஓட்டுறீங்க சார்”

(தொடரும்)

பத்து நாட்களில் கார் ஓட்டுவது எப்படி? - 8


இன்னைக்கு ஃபுல்லா ரிவர்ஸ் பண்ணி பிராக்டிஸ் பண்ணனும்ன்னு நினைச்சிருந்தேன். அவன் மெயின் ரோடு போகலாமான்னு கேட்டான். நான் ரிவர்ஸ் போறத பத்தி சொன்னேன். ஒகேன்னு கூட்டிட்டு போனான்.

பல விதமா ரிவர்ஸ் எடுத்தேன். லெப்ட் சைடு ரிவர்ஸ். ரைட் சைடு ரிவர்ஸ். எந்த பக்கம் ரிவர்ஸ் எடுத்து திருப்புறோமோ, அந்த பக்கம் ரோட்டுல வண்டி இருக்குற மாதிரி இருந்திச்சுனா நல்லதாம்.

பின்னாடி வண்டிய எடுக்கும்போது, நல்லா திரும்பி பின் கண்ணாடி வழியா வெளியே பார்க்கணும். நல்லா திரும்ப முடியாட்டி, ஸ்டியரிங்ல இருந்து ஒரு கைய எடுத்து கியர் மேலே வச்சா நல்லா திரும்ப முடியும். ஸ்ட்யரிங்க்கு ஒரு கை போதும்.

நான் வண்டி ஓட்டுற இடத்துல ஒரு ஜெயில் இருக்கு. வெள்ளை டிரெஸ் போட்டுட்டு சில பேரு குறுக்க வந்திட்டு இருந்தாங்க.

“யாரு இதெல்லாம்? வார்டனா?’

“கைதிங்க”

“என்னது? வெளியே சுத்திட்டு இருக்காங்க.”

“நல்ல கைதிங்க சார். உள்ள இருக்கும்போது பார்ப்பாங்க. நல்லபடியா இருந்தாங்கன்னா, வீட்டு வேலைக்கு கூட்டுட்டு போவாங்க. தப்பிச்சி எல்லாம் போயிட மாட்டாங்க”

உண்மைய சொல்றாரா? இல்ல?...

”சில சமயம், ஊரு சுத்தி பார்க்க கூட கூட்டிட்டு போவாங்களாம்”

சூப்பரு.

அப்பப்ப, மேட்டுல நிறுத்தி பிரேக் பிடிக்காம கிளட்ச்ச விட்டு ஸ்டார்ட் பண்றதையும் பிராக்டிஸ் பண்ணினேன்.

அப்புறம், பார்க்கிங் பத்தி சொன்னான். நம்ம நாட்டுல காரை பக்கவாட்டுல நிறுத்துற மாதிரியான பார்க்கிங்தான் பொதுவா இருக்கும். அதாவது ரோட்டோரத்தில் ஒரு கார் பின்னாடி இன்னொரு கார் இருக்குற மாதிரி. சில வெளிநாடுகளில் நாமெல்லாம் பைக் நிறுத்துவது மாதிரியான கார் பார்க்கிங் இருக்குமாம். அது சுலபமா தெரிஞ்சாலும், இட வசதி இல்லாவிட்டால் திருப்புவதற்கு கஷ்டமாம்.

நம் நாட்டில் உள்ள பார்க்கிங்கிற்கு முன்னால் சென்று, பின்பு பின்னால் வந்து ஏற்கனவே நின்று கொண்டிருக்கும் கார்களுக்கு இடையே நிறுத்தி விட வேண்டும். அப்படி நிறுத்தி பழகுவதற்கு, நமக்கென்று சில கால்குலேஷன் வைத்திருக்க வேண்டும். அதாவது, எவ்வளவு தூரம் முன்னால் செல்ல வேண்டும். எங்கிருந்து பின்னால் வர வேண்டும். எந்த இடத்தில திரும்ப வேண்டும். எப்போது நிறுத்த வேண்டும், போன்றவற்றை நமது காருக்கு ஏற்றவாறு தெரிந்து வைத்திருந்தால் சுலபமாக பார்க் பண்ணிவிட்டு வந்த வேலையை பார்க்கலாம். நேரே சென்று இரு கார்களுக்கு இடையே விடுவது சான்ஸே இல்லை.

பார்க் பண்ணியவுடன் ஹண்ட் பிரேக்கை போட்டு விட்டு செல்லவும். சிலர் ஃபர்ஸ்ட் கியரையும் போட்டு விட்டு செல்வார்கள். (திரும்பி வந்து எடுக்கும்போது கவனம் தேவை. இல்லாவிட்டால், கார் பார்க்கிங் மறக்க முடியாத நிகழ்வாகிவிடும்)

ரொம்ப முக்கியம், காரை லாக் செய்து கீயை எடுத்துட்டு போகவும். அதை போட்டுட்டு போயிடுடாதீங்க.

(தொடரும்)

பத்து நாட்களில் கார் ஓட்டுவது எப்படி? - 7


"இன்னைக்கி எங்க சார் போலாம்?”

“நீயே சொல்லு. நான் நல்லா திருப்பி திருப்பி ஓட்டணும்ன்னு நினைக்கிறேன்.”

“ஓகே. கிளம்புங்க”

“எங்க?”

“அந்த பக்கம் ஒரு லே-அவுட் இருக்கு. அங்க போலாம்.”

அது ஒரு புதியதாக உருவாகிக்கொண்டிருக்கும் லே-அவுட். சின்ன சின்னதாக நிறைய சாலைகள். வீடுகள் குறைச்சல்.லெப்ட்-ரைட்ன்னு ஸ்டியரிங்க ஒடிச்சி ஒடிச்சி ஓட்டுனேன். முக்கியமா தெரிஞ்சிக்கிட்டது, ஒரு திருப்பத்தில் திரும்பிய உடன், வீலை உடனே சரி செய்திட வேண்டும். இல்லாவிட்டால் ஏதேனும் ஆபத்து நேரிடலாமாம். ரொம்ப வேண்டி கேட்டு கொண்டான்.

பின்னாடி ரிவர்ஸ் எடுக்கும்போது திரும்பி பின் கண்ணாடி வழியாவும் பார்க்கணுமாம். சைட் கண்ணாடி வழியாவும் பார்க்கணுமாம். ரிவர்ஸ் பண்ணதுக்கப்புறம் மறக்காம, கியரை மாத்திடுங்க. நான் சில நேரங்களில் மறந்திட்டேன்.

கார்ல உள்ள நவீன தொலைநுட்பங்கள் பத்தி பேசினோம். அவன் ஒரு மந்திரி கார் பத்தி சொன்னான். மந்திரியின் செலவுகள் பத்தி சொன்னான். பிறகு, அவன் பண்ணும் செலவுகள் பத்தி சொன்னான்.

“எங்க அப்பா நான் ஸ்கூல்ல படிக்கும்போது அடிக்கடி ஐம்பது ரூபாய் கொடுப்பாரு. நான் நல்லா செலவு பண்ணுவேன். என்ன, நல்லா சாப்பிடுவேன். வேற எந்த கெட்ட பழக்கமும் இல்ல.”

“ம்ம்ம்”

“எங்க அப்பா நல்லா படிக்கல. பசங்களாவது நல்லா படிக்கணும்ன்னு நினைச்சாரு. எங்க அண்ணன் பத்து வரைத்தான் படிச்சான். என்னை ரொம்ப நம்பினாரு. நானும் சரியா படிக்கலை. எனக்கு ஒண்ணும் இல்லை சார். ஒரு சாப்ட்வேர் கம்பெனியில ஏதாவது ஒரு வேல பார்க்கணும். சம்பளம் ரொம்ப எல்லாம் வேண்டாம். ஒரு பத்து பதினைஞ்சி போதும்.”

இப்பவே அவ்வளவு சம்பாதிப்பதாக சொல்லியிருந்தான். பார்த்தேன் அவனை.

“ஒரு நாளு எங்க அப்பாவை ஆபிஸ் கூப்பிட்டுட்டு போயி சாப்பாடு வாங்கி கொடுக்கணும். அது போதும் சார்.”

அவுங்க வீட்டுல வசதியாத்தான் இருக்காங்க. என்ன, குடும்பத்துல படிச்சி யாரும் பெருசா ஆகலைன்னு ஒரு வருத்தம். அவன் அண்ணன் பையனை ஸ்கூல்ல சேர்க்கும்போது பெற்றோர்கள் படிச்சி இருக்கணும்ன்னு சொல்லி இருக்காங்க. அப்ப இருந்து, அவனுக்கு அதுக்காகவாவது படிச்சிருக்கணும்ன்னு ஒரு எண்ணம்.

“ஒரு பொண்ணு பார்த்தாங்க சார், எனக்கு”

“ஓ! அப்படியா? என்ன ஆச்சு?”

“அது படிச்ச பொண்ணு. அதுக்கு பையன் பார்க்க எங்க அப்பாக்கிட்ட சொல்லியிருக்காங்க. அப்புறம் அவுங்களே உங்க பையன் இருக்கானே?. அவனுக்கே பண்ணிடுவோம்ன்னு சொல்லியிருக்காங்க. பொண்ணு பேங்க்ல வேலை பார்க்குது. என்னோட ரெண்டு வயது அதிகம்”

ஆச்சரியத்துடன், “வயசு பரவாயில்லையா?”

“எங்க அப்பாவுக்கு ஒகே. அந்த பொண்ணு வீட்டுல எக்கச்சக்கமா நிலம் இருக்கு. ஐம்பது லட்சம் தேறும். கல்யாணத்துக்கப்புறம் எனக்கு ஏதாச்சும் பிஸினஸ் செஞ்சு வைப்பாங்கன்னு எங்க அப்பா நினைக்குறாரு.

”அப்புறம்?”

“எங்க அம்மாவுக்கு பிடிக்கலை. அவ்ளோத்தான்.”

என் டிரைவிங்ல உள்ள குறைகள பத்தி கேட்டேன். சொன்னான்.

1) ஊருக்குள்ள போகும்போது, ஹாரன் அடிக்கவே மாட்டேங்கறேனாம்.
2) திரும்பும்போது, உடனே வீலை நேராக்க மாட்டேங்கறேனாம்.
3) பிரேக் போடும்போது பின்னாடி என்ன வருதுன்னு பார்க்க மாட்டேங்கறேனாம்.

முத பிரச்சினை, ஜுஜுபி. வேணும்ன்னுதான் அடிக்கலை. எதுக்கு ஓவரா இதெல்லாம்ன்னு விட்டுட்டேன். சரி பண்ணிடலாம். ரெண்டாவது, கூடிய சீக்கிரம் சரி பண்ணிடலாம். இன்னிக்கே, இந்த பிராப்ளம் ஓரளவுக்கு இல்ல. மூணாவதுதான், எனக்கு சரியா பிடிப்படல. சடன் பிரேக், முன்னாடி ஏதாச்சும் வேகமா வருறதாலத்தான் போடுறோம். அந்த நேரம் எப்படி பின்னாடி பார்க்குறது? ஏன், இதையே அடிக்கடி சொல்றான்?

அப்படி அத பத்தியே பேசினேன். அவன் ஒருமுறை எங்கோ குடும்பத்துடன் வெளியூர் செல்லும்போது, அவன் சடன் பிரேக் போடும்போது பின்னாடி வந்த லாரி இடிச்சிடுச்சாம். இடுச்சதுல, பின் கதவு ஜாம் ஆகிடுச்சாம். கிட்டத்தட்ட இருபதாயிரம் செலவாம்.

ஓ! அதனாலதானா?

(தொடரும்)

பத்து நாட்களில் கார் ஓட்டுவது எப்படி? - 6


கத்து கொடுக்குற பையன் ரெண்டு நாளு வரல. முத நாளு கோவிலுக்கு போறேன்னு சொன்னான். ரெண்டாவது நாளு, இப்பதான் காலைல நாலு மணிக்கு திருவண்ணாமலைல இருந்து வந்தேன்’ன்னு சொன்னான்.

“திருவண்ணாமலை எப்படி இருந்திச்சி?”

“நல்லா இருந்திச்சி சார். காலெல்லாம் வலி.”

“கிரிவலமா?”

“ஆமாம் சார். அப்புறம் மலை மேலேயும் ஏறுனேன்.”

”ஓ! அப்படியா?”

கோவிலை அவன் கேமராவில் மலை மேலிருந்து படம் எடுத்திருந்தான். நல்லா இருந்திச்சி.

இன்னைக்கி யூ டர்ன், ரிவர்ஸ் அடிக்கிறது எல்லாம் பிராக்டிஸ் பண்ணலாம்ன்னு நினைச்சிருந்தேன். பண்ணலாமா?ன்னு கேட்டேன். சிட்டிக்குள்ள போலாமா?ன்னு அவன் கேட்டான்.

“ம்ம்... போலாமே”

“போயிட்டு காருக்கு பெட்ரோலும், கேஸும் அடிச்சிட்டு வந்திடலாம். ரெண்டு மணி நேரம் ஆகும். பரவாயில்லையா?”

கரும்பு தின்ன கூலியா? எக்ஸ்ட்ரா ஒரு மணி நேரம் காரு அதுவும் சிட்டிக்குள்ள ஓட்டுறதுன்னா கசக்கவா போகுது?

ரைட்... ரைட்...

போற வழியில ஏகப்பட்ட ஸ்பிட் பிரேக்கர்ஸ். கிளட்ச் பிடிச்சி ஸ்பிட் குறைச்சு, கியர் மாத்தி போறது இப்ப கொஞ்சம் சரளமாத்தான் வருது. உண்மையிலே கார் ஓட்ட பத்து நாளு தேவையில்லை.

மூணு-நாலு நாளு போதும். அதுக்கு மேலே, அவுங்க மேற்பார்வையிலே நாமளேதான் கார் ஓட்டுறோம்.

“தர்மஸ்தலா போயிருக்கீங்களா?”ன்னு கேட்டான்.

“இல்லையே”

“போயிட்டு வாங்க, சார். அருமையான கோயில்.”

“ஓ”

“எந்நேரமும் சாப்பாடு கிடைக்கும். சாப்பாடு சூப்பரா இருக்கும். அந்த சாம்பார் தண்ணியாத்தான் இருக்கும். ஆனா, அந்த டேஸ்ட் லட்சம் ரூபாய் கொடுத்தாலும் வராது. ரெண்டு நாளு மேலே அங்க இருக்க முடியாது”

”ஏன்?”

“அவுங்களே செலவு செய்து உங்கள ஊருக்கு அனுப்பிடுவாங்க. அந்த கோவிலுல இருக்குற எல்லோருமே ஹெல்ப் பண்ணுவாங்க. பஸ் டிக்கெட் கூட அந்த ஊருக்கு கம்மிதான்”

சின்ன வயசிலேயே பக்திமானா இருக்கானே? நிறைய கோவிலுக்கு போறான். சமீபத்தில் வேலூர் தங்க கோவிலுக்கும் போயிருக்கான். தர்மஸ்தலா போயிட்டு வந்ததுக்கப்புறம்தான் அவனுக்கு எல்லாமே பாசிட்டிவா நடக்குதான். எப்படியோ பாசிட்டிவ் உணர்வு வந்துச்சுன்னா போதும். நம்ம வேலைகளின் முடிவுகளை பாசிட்டிவ்வுக்கு கொண்டு வந்திடலாம்.

பெட்ரோல் பல்க்க்கு முன்னாடியே, அவன் நான் வண்டியை ஓட்டுறேன்னு சொன்னான்.

“நானே ஓட்டுறேனே?”

“இல்ல. உள்ளே ஏத்தி திருப்புறது கொஞ்சம் கஷ்டம்”

ஓகே. இதுவரைக்கும் கார்ல போறப்ப, சும்மா பாட்டு கேட்டுட்டு, வெளியே ’இயற்கை’யை ரசிச்சிட்டு வருவேன். இன்னைக்கு கொஞ்சம் தூரம் அவன் ஓட்டுன டிரைவிங்க பார்த்திட்டே வந்தேன்.

சே. நான் எவ்ளோ கேவலமா ஓட்டுறேன்!

நான் கார் ஓட்டும்போது, ஆக்ஸிலேட்டர ஏதோ அதுக்கு வலிச்சுட போகுதோங்குற மாதிரி மெதுவா மிதிப்பேன். இவன் தையல் மிஷின் மாதிரில்ல மிதிக்குறான் (பழைய வண்டி). நாமளும் மிதிச்சிட வேண்டியதுதான். நல்லா ஓட்டுறாயான்.

பெட்ரோல் போட்டத்துக்கப்புறம் நான் ஓட்ட ஆரம்பிச்சேன்.

ஒரு இடத்துல, ஒரு நாய் குறுக்க வந்தது. சல்லென்னு பிரேக்க பிடிச்சேன். நாய் தப்பிச்சிருச்சி.

“ஏன் சார் இப்படி பிரேக் பிடிக்கிறீங்க? இப்படியெல்லாம் பண்ணாதீங்க. அது எப்படியும் போயிடும். நீங்க ஸ்லோ பண்ணினா போதும். பின்னாடி வண்டி வந்திச்சின்னா என்ன பண்ணுவீங்க?”

ஒகே. அடுத்த முறை கொஞ்சம் கவனமா செய்யணும்.

திரும்பி வரும்போது, அவன் படிப்ப பத்தி சொன்னான். பிசிஐ படிக்கலாம்ன்னு ஐடியாவாம். சாப்ட்வேர் பத்தி கேட்டான். எனக்கு தெரிஞ்ச கதையை சொன்னேன். விளக்கமா கேட்டான். அவன் பேங்க் வெப்சைட் எல்லாம் யூஸ் பண்ணியிருக்கறதா ஏற்கனவே சொல்லியிருக்கான். அதனால அதை உதாரணமா வச்சி சொன்னேன். ரொம்ப ஆச்சரியமா,அவ்ளோ பண்ணலாமான்னு கேட்டான். இதுக்கே இப்படியான்னு, இன்னும் ஜனரஞ்சகமா ஆச்சரியத்தை கிளப்புவோம்ன்னு மல்டிமீடியா, அனிமேஷன் மென்பொருட்கள் பத்தி சொன்னேன். அங்க ஆரம்பிச்சது ரஜினியோட சுல்தான்கிட்ட வந்து நின்னது.

நான் சொல்லி அவனுக்கு தெரியாதது, அவனுக்கு ஆச்சரியம். அவன் சொல்லி எனக்கு தெரியாதது, என்னோட ஆச்சரியம்.

புதுசா கார் ஓட்டுறவுங்களுக்கு ஆச்சரியப்படுற மாதிரி நான் ஒரு அறிவுரை சொல்லுறேன். கேட்டுக்கோங்க.

எதையும் கத்துக்கும்போது, முட்டி மோதி கத்துக்கலாம். ஆனா, காரை அப்படி கத்துக்காதீங்க. :-)

(தொடரும்)

பத்து நாட்களில் கார் ஓட்டுவது எப்படி? - 5


இத்தினி நாளு சின்ன சின்ன ரோட்டுல ஓட்டிட்டு இருந்தேன். இன்னைக்கு மெயின் ரோட்டுக்கு கூட்டுட்டு போனான், நம்ம டிரைவர். (நான் ’போனான்’ன்னு சொன்னாலும், டிரைவர்’ங்கற வார்த்தை மரியாதையா வந்திடுச்சே!) மெயின் ரோட்டுல ஓட்டும்போது அந்த அளவுக்கு ரொம்ப வேல இருந்த மாதிரி இல்ல. திரும்பும்போதுதான் கொஞ்சம் பார்த்து திரும்பணும்.

”இந்த ரோட்டுல திடீர்ன்னு நாயி குறுக்க வந்திருச்சினா என்ன பண்ணுறது?”

பாருங்க. எப்படி எல்லாம் கேள்வி கேட்கறேன்னு. அந்த ரோட்டுல மரணமடைந்து மறைந்த நாயிகள் ஏராளம். எல்லாம் தாரோடு தாராக சேர்ந்து மறைந்து விட்டது. கொஞ்சம் பார்த்து வரலாம். நாயிக்கு என்ன தெரியும்? நாயிக்கு சைடுதான் தெரியும். முன்ன இருக்குறது தெரியாதுன்னு சொல்லுவாங்க. நமக்கு எல்லா பக்கம் தெரிஞ்சுமே, பாட்டு கேட்டுக்கிட்டோ, போன்ல பேசிக்கிட்டோ இடிச்சிக்கிறோம்.

“ஏத்திருங்க”

“ஆங்?” வாயை பிளந்தேன்.

”நான் என்ன சொன்னாலும், உங்க காலு அந்த டைம் ஆட்டோமெடிக்கா பிரேக்குக்கு போயிடும். முன்ன பின்ன பார்த்து பிரேக் போடணும். எல்லாம் உயிருதான். சடன் பிரேக் போடும்போது, பின்னாடி ஏதாவது லாரி வந்துச்சுன்னா என்ன பண்ணுவீங்க? அதுவும் கவனத்துல இருக்கணும்.”

மூணாவது கியர், நாலாவது கியர் என்று மாத்தி மாத்தி ஓட்டினேன். அப்பப்ப, நிறுத்தி நிறுத்தி ஸ்டார்ட் பண்ணினேன்.

இன்னைக்கு எதுவும் புதுசா கத்துக்கலை. அவ்ளோதானா?

“எனக்கு வளைச்சி திருப்புறது, வண்டிய பொஸிசன் பண்ணுறது எல்லாம் சொல்லி தாப்பா?”

“நாளைக்கு பார்த்துருவோம் சார்”

பேசிட்டே ஓட்டிட்டு இருக்கோம். ஒருவேளை பேசிட்டே ஓட்டுறது எப்படின்னு சொல்லி தாறானோ?

திரும்பும் போது ஸ்பீட் கொஞ்சம் அதிகமாவே இருக்கு.

டெய்லி ஒரு மணி நேரம் டிரைவிங் சொன்னதுக்கு என் பிரண்ட் எனக்கு தெரிஞ்ச இடத்துல ரெண்டு மணி நேரம்ன்னு சொன்னான். பர்ஸ்ட்டு, யாராவது கத்துக்கும் போது பின்னாடி உக்கார்ந்து ஒரு மணி நேரம். அப்புறம் நமக்கு ஓட்ட ஒரு மணி நேரம்ன்னு சொன்னேன்.

நானும் நம்மாளுக்கிட்ட கேட்டேன். அதுக்கு அவன், அப்படியெல்லாம் ஓட்ட கூடாதுன்னு சொன்னான். அப்புறம், கத்துக்க வருறவுங்க சிலர் அதுக்கு ஒத்துக்க மாட்டாங்கன்னான். பிறகு, இன்னொரு காரணமும் இருக்குன்னான்.

“என்ன?”

“போன ரெண்டு உயிர்தானே போகும்?”

அடப்பாவி.

“நீ கத்துக்கொடுக்க போனப்ப, ஏதாச்சும் ஆக்ஸிடண்ட் ஆகிருக்கா?”

”இல்லங்க”

“ம்ம்ம்”

“ஆனா, எங்க மாஸ்டர் பண்ணிருக்காரு.”

“என்னாச்சி?”

“அவரு ஒரு கார ஓட்டும்போது, வீட்டுக்காரர் மேல ஏத்திட்டாரு.”

“அப்புறம்?”

“அவுரு அவுட்”

“என்னது?" எனக்கு தூக்கி வாரி போட்டது.


(தொடரும்)